குடிபோதையில் தகராறு – ஒருவர் பலி
குன்றத்தூர் அருகே சாலையோரத்தில் குடிபோதையில் படுத்திருந்த நபரிடம் தகராறு தலையில் கட்டையால் தாக்கியதில் ஒருவர் பலி.
குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியில் சாலை ஓரத்தில் சிலர் தாக்கி கொள்வதாக வந்த தகவலையடுத்து ரோந்து பணியில் இருந்த மாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சாலையோரத்தில் படுத்திருந்த நபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் குன்றத்தூர் அடுத்த சின்னபனிச்சேரி பகுதியை சேர்ந்த யுவராஜ்(35), என்பதும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.
நேற்று இரவு குடிபோதையில் சம்பவம் நடந்த இடத்தில் சாலை ஓரத்தில் படுத்திருந்தபோது கோவூரை சேர்ந்த கணேஷ் என்பவர் குடிபோதையில் அங்கு வந்த போது யுவராஜ் படுத்திருப்பதை பார்த்து அவரிடம் தகராறு செய்த நிலையில் இருவரும் மாறி மாறி தாக்கி கொண்டதாகவும் பின்னர் போதையில் வந்த கணேசின் நண்பர்கள் யுவராஜை சரமாரியாக கல்லாலும், கட்டையாலும் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனது தெரிய வந்தது.
https://www.mugavari.in/news/tamilnadu-news/world-record-of-a-4-year-old-boy/3074
இதையடுத்து கணேசனை மாங்காடு போலீசார் கைது செய்து விசாரித்து வரும் நிலையில் இந்த சம்பவத்தில் வேறு யாரெல்லாம் ஈடுபட்டார்கள் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதையில் சாலையோரத்தில் படுத்திருந்தபோது ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.