மாதிரி வாக்குப்பதிவு முதல் வாக்குப்பதிவு நிறைவு வரை நடைபெறும் செயல்முறைகள்
மாதிரி வாக்குப்பதிவு முதல் வாக்குப்பதிவு நிறைவு வரை காலை முதல் மாலை வரை வாக்குச்சாவடியில் நடைபெறும் செயல்முறைகள் என்ன?
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.
இந்நிலையில் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடியில் நடைபெறும் செயல்முறைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
அனைத்து வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், இதற்கு 90 நிமிடத்திற்கு முன்பாக மாதிரி வாக்குப் பதிவு நடைபெறும். இந்த மாதிரி வாக்குப்பதிவானது வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிலையில் நடைபெறும்.
இதில் குறைந்தது மொத்தம் 50 வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். 50 வாக்குகளை பதிவு செய்யாமல் மாதிரி வாக்குப்பதிவை முடிக்க கூடாது.
இந்த மாதிரி வாக்குப்பதிவின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், வி வி பேட் இயந்திரம் அனைத்தும் சரியாக இயங்குகிறதா என்பது உறுதி செய்யப்படும்.
அனைத்தும் சரியாக இயங்குகிறது என்றால் மாதிரி வாக்குப்பதிவு தொடர்பான சான்றிதழை தலைமை வாக்குச்சாவடி அலுவலர் கவனமாக நிரப்பி அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களிடம் கையொப்பம் பெற்று மாதிரி வாக்குப்பதிவை நிறைவு செய்வார்.
மாதிரி வாக்குப்பதிவில் ஏதாவது ஒரு இயந்திரம் சரியாக செயல்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக அந்த இயந்திரம் மாற்றப்பட்டு மீண்டும் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும்.
இதனைத் தொடர்ந்து சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும்.
ஒரு வாக்காளர் வாக்குச்சாவடியில் நுழைந்த உடன் முதல் நிலை வாக்குச்சாவடி அலுவலர் உங்களின் பெயர் மற்றும் அடையாள ஆவணத்தை சரிபார்ப்பார்.
இரண்டாவது வாக்குச்சாவடி அலுவலர் உங்களிடம் கையெப்பம் பெற்று, கையில் மை வைத்து நீங்கள் வாக்களிப்பதற்கான சீட்டை வழங்குவார்.
மூன்றாவது வாக்குச்சாவடி அலுவலரிடம் அந்த சீட்டை வழங்கிய பிறகு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உங்களின் வாக்குகளை பதிவு செய்யலாம்.
இதன்பிறகு விவிபேட் இயந்திரத்தில் நீங்கள் அளித்த வாக்கு சரியாக பதிவாகி உள்ளதா என்பதை உறுதி செய்யலாம்.
https://www.mugavari.in/news/tamilnadu-news/satyapradha-sahu-press-meet/1287
இதன்படி, காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இடைவெளி இல்லாமல் மாலை 6 மணி வரை நடைபெறும்.
வாக்குப்பதிவு முடிந்த பிறகு வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை வையங்களுக்கு காவல்துறையின் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும்.