நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மறைவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்து, பெருந்தலைவர் காமராஜர் மீது அளப்பரிய பற்று கொண்டு இளமை பருவம் முதல் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்ட திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் அவர்கள் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். தமிழக காங்கிரஸ் தலைமை அறிவிக்கின்ற கட்சிப் பணிகளை எல்லாம் மிகுந்த பொறுப்புணர்வோடு நிறைவேற்றி இயக்கப் பணியாற்றி வந்த இவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரு. கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.