!
காங்கிரஸ் கட்சி எழுப்புகிற கேள்விக்கு பிரதமர் மோடி பதிலளிப்பதில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புகளை இழிவுபடுத்துகின்ற வகையில் பிரதமர் நரேந்திர மோடி தமது தேர்தல் பரப்புரையின் மூலம் தொடர்ந்து பேசி வருகிறார். காங்கிரஸ் கட்சி எழுப்புகிற கேள்விகளுக்கு அவர் பதில் சொல்வதில்லை. அதற்கு மாறாக, காழ்ப்புணர்ச்சியுடன் காங்கிரஸ் தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசி வருகிறார். நேற்று உத்தரபிரதேசத்தில் பங்கேற்ற தேர்தல் பரப்புரையில், ‘அரச குடும்பத்தின் வாரிசுகளே பிரதமராகும் தீய பழக்கத்தை டீ வியாபாரி ஒழித்து விட்டார்” என்று கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். 1970களில் மன்னர் மானியத்தை ஒழித்து மன்னராட்சிக்கு முடிவு கட்டிய பெருமை நேரு பாரம்பரியத்தில் வந்த அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு உண்டு.
விடுதலை போராட்ட காலத்தில் செல்வ செழிப்புமிக்க குடும்பத்தில் மோதிலால் நேருவுக்கு மகனாக பிறந்த ஜவஹர்லால் நேரு பிரிட்டீஷ் ஆட்சியில் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக 9 முறை தண்டிக்கப்பட்டு 3256 நாட்கள் – ஒன்பதரை ஆண்டுகாலம் சிறைச் சாலையில் வாடியவர். அத்தகைய தியாகத்தை செய்த பண்டித நேருவை காந்தியடிகளின் பரிந்துரையின் பேரில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பொறுப்பேற்று 17 ஆண்டுகாலம் ஆட்சி செய்து நவஇந்தியாவின் சிற்பி என்று அனைவராலும் போற்றி பாராட்டு பெற்றவர் ஜவஹர்லால் நேரு.
இந்திய ஜனநாயகத்தில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை என்பதை மோடி நன்கு அறிந்திருந்தாலும் தொடர்ந்து அதே குற்றச்சாட்டை கூறி வருகிறார். பண்டித நேரு பாரம்பரியத்தில் வந்த அனைவருமே இந்திய ஜனநாயகத்தில் நடைபெற்ற தேர்தல் மூலமாக மக்களின் அமோக ஆதரவை பெற்று தான் மக்களவை உறுப்பினர்களாக தேர்வு பெற்று பதவிக்கு வந்திருக்கிறார்கள். பாபர் மகன் அக்பர் வந்ததைப் போல, வாரிசுகளுக்கு பதவி கொடுப்பதற்கு இந்திய ஜனநாயகத்தில் வாய்ப்பில்லை.
இந்தப் பின்னணியில் இந்திய விடுதலைக்காகவும், இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் தமது வாழ்நாளை அர்ப்பணித்ததோடு இந்திரா காந்தியும், ராஜிவ்காந்தியும் இந்த நாட்டின் நலனுக்காக தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டதை நன்றியுள்ள இந்தியர்கள் எவரும் மறக்க மட்டார்கள். ஆனால், விடுதலை போராட்டத்தில் பங்கேற்று ஒருநாள் கூட சிறைக்கு செல்லாமல் ஒரு துரும்பை கூட எடுத்துப் போடாமல் இந்திய ஜனநாயகத்தை பயன்படுத்தி வகுப்புவாத அரசியல் மூலம் பதவியை கைபற்றி அனுபவித்து வருகிற பா.ஜ.க.வுக்கு விடுதலைப் போராட்டத்தைப் பற்றியோ, அதற்காக தங்களது இன்னுயிரை நீத்தவர்களின் வரலாற்றையோ அறிந்திருக்க வாய்ப்பில்லை.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறாததையெல்லாம் நரேந்திர மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் போன்றவர்கள் இட்டுக்கட்டி திரித்து பேசி வருகிறார்கள். பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீட்டை சிறுபான்மையினருக்கு வழங்கப் போவதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் எங்கேயும் குறிப்பிடவில்லை. அரசமைப்புச் சட்டத்தின் மூலம் இத்தகைய இடஒதுக்கீடுகளை வழங்கிய காங்கிரஸ் கட்சி இதனை பறிக்கப் போவதாக அபாண்டமாக கூறி வகுப்புவாத அரசியலின் மூலம் மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து வருகிறார்கள். இதன்மூலம் பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிமுறைகளை அப்பட்டமாக தொடர்ந்து மீறி வருகிறார். இந்திய பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன்படி பிரிவு 123-ன் கீழ் மதத்தின் அடிப்படையில் பரப்புரை மேற்கொண்டால் நடவடிக்கை எடுப்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கிறது என உச்சநீதிமன்றம் 2017 இல் தீர்ப்பு கூறியிருக்கிறது.
ஆனால், பிரதமரின் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட தேர்தல் ஆணைய உறுப்பினர்களிடம் நியாயமான, பாரபட்சமற்ற அணுகுமுறை இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. தேர்தல் ஆணையம் என்பது மோடியின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது. மத உணர்வை தூண்டுகிற இவரது பேச்சுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் தலைமை தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்த போது, பிரதமர் மோடிக்கு நோட்டீஸ் அனுப்பாமல் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய விந்தையை விட ஒரு கேவலம் வேறு ஒன்றும் இருக்க முடியாது. எனவே, முதல் இரண்டு கட்டங்கள் முடிந்து மூன்றாவது கட்ட தேர்தல் நடைபெறுகிற நிலையில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்ற யதார்த்த கள நிலவரத்தை அறிந்த பிறகு பேச்சில் பதற்றமும், தடுமாற்றமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எப்படியாவது, எதையாவது பேசி சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தி நாட்டு மக்களிடையே பிளவை உருவாக்கி அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடி குளிர்காய நினைக்கிற கீழ்த்தரமான அரசியல் பரப்புரையின் மூலம் 2024 மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி வெல்ல முடியாது. பா.ஜ.க.வுக்கு தோல்வி காத்திருக்கிறது. இந்தியா கூட்டணியின் வெற்றி வாய்ப்பு ஒளிமயமாக மாறி வருகிறது. மக்களவை தேர்தல் முடிந்ததும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிரதமர் மோடியின் பாசிச, சர்வாதிகார 10 ஆண்டுகால மக்கள் விரோத ஆட்சியின் பிடியிலிருந்து 140 கோடி இந்தியர்களும் விடுவிக்கப்படுவது உறுதியாகி வருகிறது. இதன்மூலம் இந்தியா மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிற பொற்காலத்தை அமைக்க தலைவர் ராகுல்காந்தியின் சூறாவளி சுற்றுப்பயணமும், பரப்புரையும் பெரும் துணையாக இருக்கப் போகிறது. எனக் குறிப்பிட்டுள்ளார்.