செங்கோட்டை அருகே 8 மணி நேரமாக ஒரே இடத்தில் நின்ற யானை பரிதாபமாக உயிரிழந்தது.
தமிழக – கேரள எல்லை பகுதியான செங்கோட்டை புளியரை பகவதிபுரம் ரயில் நிலையம் அருகேயுள்ள கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் பம்பு செட் அருகே சுமார் 25 வயதுடைய ஆண் யானை முகாமிட்டது. இதைப் பார்த்த விவசாயிகள் உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து வனத்துறையினரும், விவசாயிகளும் சேர்ந்து யானையை விரட்ட முயற்சி செய்தனர். ஆனால் காட்டு யானை நகராமல் அதே இடத்தில் முகாமிட்டுள்ளது. சுமார் 8 மணி நேரமாக ஒரே இடத்தில் யானை முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து யானை ஏதேனும் நோய்வாய்ப்பட்டு உள்ளதா என்பது தொடர்பாக நெல்லை மண்டல வனவிலங்கு மருத்துவர் மனோகரன் பரிசோதனை செய்தார். இதைதொடர்ந்து யானைக்கு சத்து மாவு, உணவு குடிநீர் வழங்கினார். ஆனால் யானையின் வாய்பகுதியில் பெரிய அளவிலான புண் ஏற்பட்டிருந்ததால் யானை உண்ண முடியாமல் அங்கேயே நின்றது.
இதனால் வேறு வழியின்றி யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து இரவு முழுவதும் அதே இடத்தில் வனத்துறையினர் பாதுகாப்புக்கு இருந்தனர். இந்த சூழலில் நள்ளிரவில் யானை உயிரிழந்தது. இதையடுத்து யானைக்கு உடற்கூறாய்வு செய்யப்பட்டு அதே இடத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.