வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு – வரும் 30ம் தேதி உத்தரவு அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது வரும் 30 தேதி உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச்சட்ட வழக்கில் கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14- ஆம் தேதி அன்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இதுவரை 34 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 25- ஆம் தேதி வரை அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றக் காவல் முடியும் ஏப்ரல் 25- ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக ஆஜராகும்படி செந்தில் பாலாஜிக்கு நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது வரும் 30 தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கையை ஏற்று மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காசோலை உள்ளிட்ட வங்கி ஆவணங்களில் தேதி, மாதம் திருத்தப்பட்டுள்ளதாக அவர் தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது.