ஸ்ரீபெரும்புதூர் அருகே மண்ணூர் கூட்டுச்சாலையில் ஆட்டோவில் முட்டை சப்ளை செய்வது போல போதைப்பொருட்கள் விற்பனை செய்த 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மண்ணூர் கூட்டுச்சாலை சந்திப்பில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவள்ளூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி வந்த ஆட்டோவை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் முட்டைகள் இருந்தன. மேலும் அதற்கு அடியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், கூல் லிப் , பாக்கு போன்ற போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது போலீசாருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து ஆட்டோவில் வந்த திருவள்ளூர் பாப்பரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (34), சிவா (24) உள்ளிட்ட இரண்டு பேரை கைது செய்ததுடன் ரூ.44 ஆயிரம் மதிப்புள்ள 77 கிலோ எடையுள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்து இரண்டு பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதைப்பொருட்கள் சம்பந்தமாக இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.