தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் ஆகிய 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பொதுமக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.