வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – 3 பேர் கைது
திருப்பத்தூர் வாலிபரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த பீகாரை சேர்ந்த 3 பேர் கைது செய்தனர்.
திருப்பத்தூரை சேர்ந்த வாலிபரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த பீகாரை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூரை சேர்ந்தவர் மோனிஷ் (வயது 19). இவரது செல்போனுக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் பீகார் மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் வேலை இருப்பதாகவும், அதற்கான தங்கள் கல்வி சான்றிதழை அனுப்பி வைக்கவும் என குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதை நம்பிய மோனிஷ் அவர்கள் கேட்ட சான்றிதழ்களை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி உள்ளார். சிறிது நேரத்துக்கு பிறகு அவர்கள் மோனிசை தொடர்பு கொண்டு தங்களுக்கு வேலை உறுதியாகிவிட்டது. அதற்காக நாங்கள் கொடுக்கும் வங்கி கணக்கிற்கு குறிப்பிட்ட பணத்தை அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதற்கு மோனிசும் சம்மதித்து உடனே அவர்கள் அனுப்பி வங்கி கணக்கிற்கு ரூ.6 லட்சத்து 53 ஆயிரத்து 583 ரூபாய் அனுப்பி உள்ளார். இதையடுத்து அவர்கள் ஓரிரு நாட்களில் உங்கள் முகவரிக்கு பணியானை வந்துவிடும், அதன் பிறகு நேரில் வந்து வேலையில் சேர்ந்து கொள்ளலாம் என கூறியுள்ளனர்.
ஆனால் ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் எந்த பணியானையும் வராததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மோனிஷ் இதுகுறித்து திருப்பத்தூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், பீகார் மாநிலத்தை சேர்ந்த முகேஷ்குமார், ஜித்தேந்திர குமார், அமன்குமார் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.
https://www.mugavari.in/tamilnadu-weather-report-3/
இவர்கள் இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு ஜார்கண்ட் மாநிலம் ஆசாரிபாத் மாவட்டம், கோரா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கடந்த 27 ஆம் தேதி திருப்பத்தூர் சைபர் க்ரைம் போலீசார் ஜார்கண்ட் மாநிலம் சென்று சிறையில் உள்ள மூன்று பேரையும் மேல் விசாரணைக்காக திருப்பத்தூர் அழைத்து வந்தனர்.
மேலும் இவர்கள் வேலூர் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் போலீசார் விசாரணை செய்து இரு நாட்களுக்குள் மீண்டும் ஜார்க்கண்ட் மாநில சிறையில் ஒப்படைக்க போவதாக போலீசார் கூறினர்.