தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 26.04.2024 முதல் 30.04.2024 வரை: அடுத்த ஐந்து தினங்களில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். 30.04.2024 மற்றும் 01.05.2024: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 02.05.2024: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இந்நிலையில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.