நாளை 12 ஆம் வகுப்பு பொது தேர்வு ரிசல்ட் வெளியாகிறது. அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக மாணவர்கள் தெரிந்துக் கொள்ளலாம்.
தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்த 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 12ம் தேதி முதல் 17ம் தேதி வரையிலும் நடைபெற்றது. தொடர்ந்து மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கிய 12ம் வகுப்பு பொதுத் தேர்வை, தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 3,302 தேர்வு மையங்களில் 7, 534 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 7,72,360 மாணவர்களும், 8,190 தனித்தேர்வர்கள் என 7. 80 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு பணிகளை கண்காணிப்பதற்காக 1,135 பறக்கும் படையினரும், தேர்வினை கண்காணிக்கும் பணியில் 43 ஆயிரத்து 200 ஆசிரியர்களும் ஈடுப்பட்டனர். சென்னை மாவட்டத்தில் 591 பள்ளிகளை சேர்ந்த 62, 124 மாணவர்கள் 240 மையங்களில் தேர்வை எழுதினர்.
மார்ச் 22ம் தேதி பொதுத்தேர்வு முடிவடைந்ததை தொடர்ந்து மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுக்காப்பு மையங்களில் விடைத்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, தொடர்ந்து 86 மையங்களில், ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 13ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுமையாக முடிவடைந்து, சரிபார்க்கும் பணிகளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் முடிவடைந்தது.
இந்நிலையில் நாளை(மே-6) திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணி அளவில் வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.dge.tn.gov.in மற்றும் www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களின் தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம். மேலும் மாணவர்கள் எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.