சோழவரம் அருகே சாலையோரம் லாரியை நிறுத்த முயன்ற போது திடிரென தீப்பற்றியது.
சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடக பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரி ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஓட்டுனா் லாரியை சோழவரம் அடுத்த செம்புலிவரம் பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையோரமாக நிறுத்த முயன்றார். அப்போது மேலே சென்றுகொண்டிருந்த உயரழுத்த மின் கம்பி லாரியில் பட்டு தீப்பற்றியது. தீயை அணைக்க முயன்ற போது ஓட்டுநர் தவறி தீயில் விழுந்து உடலில் தீப்பற்றியது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் இதில் ஓட்டுநர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து உயிரிழந்த ஓட்டுநரின் விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்