தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த “மே தின” நல்வாழ்த்துக்கள் என நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்குப் பறைசாற்றும் இந்த மே தினத்தில், தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த “மே தின” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். முன்னதாக 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது.
இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists) ஆகும். சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கையாகும். இந்தியாவில் சென்னை மாநகரில் 1923-ஆம் ஆண்டில் மெரீனா கடற்கரை மற்றும் திருவான்மியூர் பகுதிகளில் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும், தலைசிறந்த சீர்திருத்தவாதியுமான ம. சிங்காரவேலர் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள மெரினா கடற்கரையில், இந்தியாவின் முதல் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. திருவான்மியூர் கூட்டத்தில், சுப்பிரமணிய சிவா மற்றும் எம்.பி.எஸ்.வேலாயுதம் தலைமையில் இந்தியாவின் முதல் மே தினம் கொண்டாடப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. எனக் குறிப்பிட்டுள்ளார்.