ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ஆம் தேதி மர்மகும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக செம்பியம் தனிப்படை காவல்துறையினர் ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்ளிட்ட 28 பேரை கைது செய்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோரை குண்டர் சட்டத்தில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் நடவடிக்கை மேற்கொண்டார்.
இந்த நிலையில், ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் கைதான சென்னை கோடம்பாகத்தைச் சேர்ந்த விக்னேஷ்குமார், விஜயகுமார், திருவள்ளூர் நத்தமேடு காலனியைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோர் ஜாமீன் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் அவா்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இலங்கை சிறையிலிருந்த 17 மீனவர்களை மீட்டு ; சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க தமிழக அரசு நடவடிக்கை.
அப்போது காவல்துறை தரப்பில், விக்னேஷ்குமார், விஜயகுமார் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் வெடிகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தனர் என்றும், மனுதார்கள் 3 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கபட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்றும் காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, தற்போதைய நிலையில் 3 பேருக்கும் ஜாமீன் வழங்க முடியாது மனு தள்ளுபடி செய்து, முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் உத்தரவிட்டார்.