கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி கடற்கரையில் பொதுமக்கள் இறங்கவும், குளிக்கவும் போலீசார் தடை விதித்துள்ளனர். வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடற்கரை பகுதிகளில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் இன்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி கடலில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இறங்கவும், குளிக்கவும் போலீசார் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளனர். மேலும் கடற்கரைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளை போலீசார் ஒலி பெருக்கிகள் மூலம் எச்சரித்து, அங்கிருந்து வெளியேற்றினர். அத்துடன் கடலில் யாரும் இறங்காதவாறு போலீசார் தொடர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.