தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால், தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழையும், திண்டுக்கல், தேனி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 17 மாவட்டங்களிலும், நாளை மறுதினம் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 16 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வரும் 8ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 12 மாவட்டங்களிலும், வரும் 9ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 13 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
வரும் 10ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மேகம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் , நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.