சென்னையில் பயணிகளை ஏற்றிச் சென்ற கொண்டிருந்த மாநகர குளிர்சாதன பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பயணிகள் உரிய நேரத்தில் இறக்கி விடப்பட்டதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
சென்னை பிராட்வேயிலிருந்து சிறுசேரிக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று வழக்கம் போல் அடையாறு எல்.பி. சாலையில் சென்று கொண்டிருந்தப் பேருந்தில் புகை கிளம்பிய நிலையில், மளமளவென தீ பற்றி எரிந்தது. இதனால், பயணிகள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர்.
பயணிகள் இறங்கிய சற்று நேரத்தில் பேருந்து தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் போல் காட்சி அளித்தது.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீ அணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை அடையாறு எல்.பி. சாலையில் பேருந்து தீ பிடித்து எரிந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.