டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்கின் இந்திய வருகை தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா மற்றும் எக்ஸ் வலைதளத்தின் தலைவருமான எலான் மஸ்க் இரண்டு நாட்கள் பயணமாக இந்தியா வர திட்டமிட்டு இருந்தார். வருகிற 21 மற்றும் 22ம் தேதிகளில் எலான் மஸ்க் இந்தியாவிற்கு வர திட்டமிட்டு இருந்தார். இந்த வருகையின் போது எலான் மஸ்க் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அவரது ஸ்டார்லிங் நிறுவனத்திற்கான உரிமம் தொடர்பாக எலான் மஸ்க் பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. எலான் மஸ்கின் இந்திய பயணத்தின் போது டெஸ்லா நிறுவனம் சுமார் 2 பில்லியன் டாலர் வரை இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியானது.
டெஸ்லா நிறுவனத்தின் முதலீடுகளை ஈர்க்க மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் மும்முரம் காட்டி வந்தன. இந்த நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்கின் இந்திய வருகை திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எலான் மஸ்க் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய பயணம் எதிர்பாராத காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியா செல்ல எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.