ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாரிசில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 மீ., தூரம் ஈட்டி எறிந்து இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி ‛எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கம் மூலம் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இன்று நீரஜ் சோப்ராவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். காயம் குறித்து கேட்டறிந்ததுடன், அதனை பொருட்படுத்தாமல் விளையாடியதற்கு பாராடியுள்ளார்.
தங்கம் வென்ற வீரரும் தனது மகன் தான் எனக்கூறிய நீரஜ் சோப்ராவின் தாயாருக்கும் வாழ்த்து தெரிவித்தார். தங்கம் வெல்லவில்லை என்பதற்காக மனம் தளர வேண்டாம் எனவும் ஆறுதல் கூறினார்.
நீரஜ் சோப்ராவிடம் மோடி கூறியதாவது:
உங்களால் தேசம் பெருமை கொள்கிறது. தங்கம் வெல்லவிலை என்பதற்காக மனம் தளர வேண்டாம். மீண்டும் நாட்டு மக்களை பெருமைப்படுத்தி உள்ளீர்கள். நள்ளிரவு ஒரு மணி ஆனாலும், உங்களின் போட்டியை மக்கள் நம்பிக்கையுடன் பார்த்தனர். கடினமான சூழ்நிலையிலும் நாட்டிற்காக பதக்கம் பெற்றுக் கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.