திண்டுக்கல்லில் கொலை வழக்கில் கைதான ரிச்சர்ட் சச்சின் என்ற ரவுடி தப்பியோட முயன்றதால் போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர். திண்டுக்கல்லில் பேருந்து நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை அன்று இர்பான் என்ற இளைஞர் மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ரவுடி ரிச்சர்ட் சச்சின் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் இர்பானை கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக இன்று காலை ரிச்சர்ட் சச்சினை திண்டுக்கல் மாலைப்பட்டி சுடுகாடு பகுதிக்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.
அப்போது, அங்கு மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் ரிச்சர்ட் சச்சின் போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றார். இதில் காவலர் அருண் என்பவர் காயம் அடைந்தார்.
இதனை அடுத்து, காவல் ஆயவாளர் வெங்கடாஜலம் எச்சரித்தும் ரிச்சர்ட் சச்சின் தப்பியோட முயன்ற நிலையில் அவரது வலது காலில் சுட்டுப்பிடித்தனர். தொடர்ந்து, காயம் அடைந்த ரிச்சர்ட் சச்சின், காவலர் அருண் ஆகியோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் திண்டுக்கல் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.