தென் மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 2 நாட்களில் தமிழ்நாடு – இலங்கை கடற்கரை நோக்கி நகரக்கூடும். அடுத்த 3 நாட்களுக்கு சென்னை முதல் குமரி வரை கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை, அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்று கணிக்கப் பட்டிருந்தது. பின்னர், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்தது.
மியான்மர் கடல் பகுதியில் உள்ள காற்று சுழற்சி, வடகிழக்கு காற்றை தடை செய்வதன் காரணமாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. இரண்டு முறை தாமதமான நிலையில் இன்று இரவுக்குள் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 2 நாட்களில் தமிழ்நாடு – இலங்கை கடற்கரை நோக்கி மேற்குவாக்கில் மெதுவாக நகரக்கூடும். அடுத்த 3 நாட்களுக்கு அதாவது, நவம்பர் 15 ஆம் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை (நவம்பர் 12) தமிழத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.