கள்ளக்குறிச்சி: மது பழக்கத்தினால் அழிந்துவரும் இந்துக்களை பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் காப்பாற்ற வேண்டும் என்று திருமாளவன் கேள்வி எழுப்பி உள்ளார். பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்.
மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்பன உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேடையில் இந்த தீர்மானங்களை வாசித்தபின் திருமாவளவன் பேசினார். அப்போது திருமாவளவன் கூறியதாவது: இளம்வயதில் ஒருவருக்கு மது மற்றும் போதைப் பழக்கம் வந்தால் மனித வளம் அழியும்.
இதை உணர்த்தவும், மதுவிலக்கை அமல்படுத்தவே நம் மாநாடு நடத்தப்படுகிறது. ஆனால் நம் மது ஒழிப்பு மாநாட்டின் உயர்ந்த நோக்கத்தை சிலர் சிதைத்துவிட்டார்கள்.
அனைத்துக் கட்சிகளுக்கும் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அரசியல் சாயம் பூசிவிட்டார்கள்.இந்த மாநாட்டுக்கு திமுகவை எப்படி அழைக்கலாம்? தமிழ்நாட்டில் திமுக ஆட்சி தானே நடக்கிறது. கடைகளை திறந்து வைத்து அவர்கள் தானே வியாபாரம் செய்கிறார்கள். அப்படியென்றால் திமுக எப்படி இந்த மேடைக்கு வர வேண்டும்? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்த கேள்விக்கு மத்தியில் திமுக இந்த மாநாட்டு மேடைக்கு வருகிறது என்றால் அது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கிடைத்த வெற்றி தானே. பாராட்ட வேண்டுமா இல்லையா?.
மதுவை ஒழிக்க வேண்டும் என்பதில் திமுகவுக்கும் உடன்பாடு இருக்கிறது. கொள்கை அடிப்படையில் மதுவை ஒழிக்க வேண்டும் என்பதில் எங்களுக்கும் உடன்பாடு இருக்கிறது. நடைமுறை சிக்கலில் டாஸ்மாக்கை எங்களால் உடனடியாக மூட முடியவில்லை.
திமுக தலைவர் கருணாநிதி தானே டாஸ்மாக்கை கொண்டு வந்தார்கள்? என்று சொல்கிறார்கள். 1971ல் வந்தது உண்மை தான். அதன் பின்னர் 1974ல் மதுக்கடைகளை திறந்தது எம்.ஜி.ஆர், அதைத்தொடர்ந்து மதுக்கடைகளை அரசுடைமை ஆக்கியது ஜெயலலிதா. இதை யாரும் பேசவில்லை.
அண்ணா 1967 ம் ஆண்டு முதலமைச்சர் ஆனார். 2 ஆண்டுகள் முதலமைச்சராக அவர் இருந்தார். 1969ல் மறைந்தார். இந்த 2 ஆண்டு காலக்கட்டத்தில் மதுக்கடைகளை திறக்க வேண்டும்என்ற கோரிக்கை இருந்தது. மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. ஆனால் திமுகவை நிறுவிய அண்ணா, மதுவிலக்கு கொள்கையில் உறுதியாக இருந்தார். மாட்டேன் மதுவிலக்கு கொள்கையை ரத்து செய்ய மாட்டேன். அப்படியொரு வருமானம் எனக்கு வேண்டாம் என்று உறுதியாக சொன்னார். மதுக்கடைகளை திறக்கவே இல்லை.
இப்போது முதல்வரிடம் கேட்காமல் திருமாவளவன் ஏன் மோடியிடம் போய் மதுவிலக்கு கேட்கிறார்கள்? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். நாங்கள் 2 பேரிடமும் தான் கேட்கிறோம். தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று முதல்வரிடமும், இந்தியாவில் மதுக்கடைகளை மூடி மதுவிலக்கு கொள்கையை சட்டமாக்க வேண்டும் என்று மத்திய அரசிடமும் கேட்கிறோம். இரண்டு அரசுக்கும் கோரிக்கை வைக்கிறோம்.
காந்தியடிகளின் கொள்கைகளில் நமக்கு விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவரின் 2 கொள்கையில் நமக்கு உடன்பாடு உண்டு; ஒன்று மதச்சார்பின்மை மற்றொன்று மதுவிலக்கு. காந்தியின் உயிர்மூச்சுக் கொள்கையில் ஒன்று மதுவிலக்கு; அதனால்தான் அவர் பிறந்தநாளில் இந்த மாநாட்டை விசிக நடத்துகிறது.
மது ஒழிப்பு மாநாடு அரசியல் நோக்கத்தோடு கொண்டது அல்ல. மதுவிலக்கே ஒன்றே நமது கோரிக்கை. இது கவுதம புத்தர் முன்வைத்த முழக்கம். சாதி, மத பெருமையை நாங்கள் பேசக்கூடியவர் அல்ல. பகவான் புத்தரின் பெருமைகளை பேசக்கூடியவர்கள். மதுவால் இந்துக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பிரதமரும் உள்துறை அமைச்சரும் இந்துக்களை காப்பாற்ற முன்வருவார்களா?’ என்ற கேள்வியை முன்வைத்தார்.