திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்ட புதிய முனையம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1,112 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய முனையத்தை கடந்த ஜனவரி மாதம் 2ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
விமான நிலையம் திறக்கப்பட்ட நிலையில் தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் நடந்து வந்தது.அனைத்து பணிகளும் நிறைவடைந்ததை தொடர்ந்து புதிய முனையத்தில் விமான போக்குவரத்து இன்று தொடங்கியுள்ளது.
சென்னையில் இருந்து திருச்சி வந்த இண்டிகோ விமானம் முதலாவதாக புதிய முனையத்திற்கு வந்தது. அந்த விமானத்திற்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து(வாட்டர் சல்யூட்) வரவேற்பு கொடுக்கப்பட்டது. இன்று வருகை தரும் புறப்படும் பயணிகளுக்கு இனிப்புகளை விமான நிலைய அதிகாரிகள் கொடுத்து புதிய முனைய செயல்படும் நிகழ்வை கொண்டாடினர்.
புதிய முனையத்தில் ஆண்டுக்கு 45,00,000 பயணிகளை கையாள முடியும் அதே நேரத்தில்,10 விமானங்களில் வந்து செல்லும் 3000 பயணிகளை கையாளலாம். ஒரு மணி நேரத்திற்கு 12 விமானங்கள் தர இறங்கவும் புறப்பட்டும் செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
ஒரு நாளில் குறைந்த பட்சம் 240 விமானங்கள் வந்து செல்லும் வகையில் தொழில்நுட்ப வசதி இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 75,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனைகள் 750 கார்கள், 250 வாடகை கார்கள், 10 பேருந்துகள் நிறுத்த வாகன நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.
60 வருகை கவுண்டர்கள், 44 புறம்பாடு கவுண்டர்கள் என மொத்தம் 104 நுழைவு கவுண்டர்களுடன் புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது.