நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் மீதான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் ரேஷன் கடைகளில் மே மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பு ஆகியவை கிடைக்கவில்லை எனில் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
பொது விநியாகத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும், ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது.
தொடர்ந்த அரசு முயற்சித்து மே 27 ஆம் தேதி 82,82,702 குடும்ப அட்டைதாரர்களுக்குத் தலா ஒரு கிலோ துவரம் பருப்பினையும், 75,87,865 குடும்ப அட்டைதாரர்களுக்குத் தலா ஒரு லிட்டர் பாமாயில் பாக்கெட்டினையும் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் அரிசி தவிர்த்து இதர பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், மே மாதத்திற்கான ரேஷன் பொருள்களை ஜூன் மாத இறுதிவரை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து ரேஷன் கடைகளுக்கும் துவரம் பருப்பு, பாமாயில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தங்கு தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.