கோவையில் தந்தை பெரியார் நூலகம் – அறிவியல் மய்யம்- கி.வீரமணி வரவேற்பு. தந்தை பெரியாரின் பெயரால் நூலகமும் – அறிவியல் மய்யமும் கோவையில் திறக்கப்படும் என்பதோடு மட்டுமல்லாமல், அதன் திறப்பு விழா தேதியையும் அறிவித்த முதலமைச்சரை தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நமது ‘திராவிட மாடல்‘ அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் பெரியார் நூலகம்- அறிவியல் மையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.முதலமைச்சர் இதனை அறிவிக்கும்போது ‘‘இனிவரும் உலகம்‘‘பற்றி தந்தை பெரியார் தொலைநோக்கோடு சொன்னதையும் சுட்டிக்காட்டியது மிகவும் பொருத்தமானது. சோதனைக் குழாய்க் குழந்தைபற்றி 1938 ஆம் ஆண்டிலேயே கணித்தவர் தந்தை பெரியார். (ஆய்வுக்கவுண்டன்பாளையம் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை – ‘குடிஅரசு‘, (30.1.1938). அதேபோல, 1943 ஆம் ஆண்டு செய்யாறு – திருவத்திபுரத்தில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணத்திற்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரையி்ல் குறிப்பிட்ட – எதிர்கால விஞ்ஞான வளர்ச்சியில் எவை எல்லாம் ஏற்படும், நிகழும் என்பதை எடுத்துக் கூறியவர் தந்தை பெரியார். அந்த உரையைத் தம் கைப்பட எழுதி ‘திராவிட நாடு‘ இதழில் (21.3.1943, 28.3.1943) வெளியிட்டவர் அறிஞர் அண்ணா.
சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பில் (5.11.2023) நடைபெற்ற தந்தை பெரியார் விழாவில் உரையாற்றிய ‘சந்திராயன்‘ புகழ் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள், ‘‘எனக்குப் பின்புலமாக இருந்தது தந்தை பெரியாரின் அறிவியல் சிந்தனையே’’ என்று கூறியதும் நினைவுகூரப்பட வேண்டிய ஒன்றாகும்.எல்லாத் திசைகளிலும் சிந்தித்து, நூலகத்தோடு – அறிவியல் மய்யத்தையும் இணைத்து தந்தை பெரியார் பெயரை நமது முதலமைச்சர் சூட்டியிருப்பதற்கு எவ்வளவுப் பாராட்டினாலும் தகும்.அடிக்கல் நாட்டியதோடு, திறப்பு விழா தேதியையும் அடிக்கல் நாட்டும் விழாவிலே அறிவித்த ஒரே முதலமைச்சர் நமது மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆளுமைத்திறனும், செயல்திறனும் அளப்பரியது – ஒப்பிட முடியாதது. பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று பாராட்டியுள்ளார்.