தனது இனிமையான குரலால் உலகமெங்கும் உள்ள ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்தவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.
எத்தனை மொழியாக இருந்தாலும் சரி அத்தனை மொழியிலும் எந்த ஒரு பிழையும் இன்றி பாடல்களை பாடி அசத்தும் அசாத்திய திறமை உடையவர் எஸ்.பி.பி. இவர் திரைத்துறையில் 40 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த நிலையில் கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி தேசிய விருது, ஆந்திர அரசின் நந்தி விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது போன்ற பல விருதுகளை அள்ளியவர்.
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக கொரோனா தொற்று காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த எஸ்பிபி அதிலிருந்து மீண்டு வந்த பின்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதற்கிடையில் எஸ்.பி.பி சரண், எஸ். பி.பாலசுப்ரமணியம் வாழ்ந்த காம்தார் நகரை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நகர் என பெயர் மாற்றம் செய்யக்கோரி முதல்வர் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார்.
எஸ்.பி.பி சரவணன் அந்த கோரிக்கையை ஏற்ற முதல்வர் ஸ்டாலின் நேற்று (செப்டம்பர் 25) எஸ்.பி.பி-யின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை என்ற பெயர் சூட்டப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இந்நிலையில் எஸ்.பி.பி சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “அப்பாவின் இந்த நினைவு நாள் மறக்க முடியாத நாளாக அமைந்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு தலைமைச் செயலகம் சென்று மனு கொடுத்திருந்தேன். காம்தார் நகரில் அப்பா வாழ்ந்த தெருவிற்கு அப்பாவின் பெயரை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன்.முதல்வர் மிக முக்கியமான வேலையில் இருந்ததால் அவரை சந்திக்க முடியவில்லை. ஆனால் 36 மணி நேரத்திற்குள் அப்பாவின் நினைவு நாளன்றே அவர் வாழ்ந்து வந்த சாலைக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தருணத்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சாமிநாதன் என ஒட்டு மொத்த அரசாங்கத்திற்கும் என்னுடைய குடும்பத்தின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார்.