நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் முதன்முறையாக கூட்டணி அமைக்கும் வாடிவாசல் திரைப்படம். இத்திரைப்படத்தில் இயக்குநரும் நடிகருமான அமீர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக சன் நியூஸ்க்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் தெரிவித்திருந்தார்.
கலைப்புலி எஸ்.தானு தயாரிப்பில்,வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் வாடிவாசல். பிரபல எழுத்தாளர் சி.சு செல்லப்பாவின் வாடிவாசல் என்ற நாவலை மையப்படுத்தி இப்படம் உருவாக உள்ளது.
கடந்த சில ஆண்டுக்கு முன்பு வாடிவாசல் திரைப்படத்திற்கு நடிகர் சூர்யா பயிற்சி எடுக்கும் விதமாக மாடு பிடிக்கும் வீடியோவையும், படத்தின் தலைப்பையும் படக்குழு வெளியிட்டு படம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.
சூர்யா மாடுபிடிக்கும் வீடியோ வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், இயக்குனர் வெற்றிமாறனும் நடிகர் சூர்யாவும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் கவனம் செலுத்தியதால் வாடிவாசல் படத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் பாதியிலேயே நின்றது.
இந்த நிலையில் சமீபத்தில் வாடிவாசல் படத்திற்கான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ளது. அந்த வகையில் வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யாவுடன் இயக்குனரும் நடிகருமான அமீர் இணைந்து நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இது தொடர்பாக அமீர் சன் நியூஸுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் வெற்றிமாறன் படங்களில் நடித்த அனுபவங்களை பற்றி பகிர்ந்துகொண்டார்.
மேலும் அவர் இயக்க உள்ள வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு முரணான கதாபாத்திரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் சமீபத்தில் கூட படம் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்து புதிய அப்டேட்டை கொடுத்துள்ளார். விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.