நான் வைக்கும் அனைத்து டெஸ்ட்களிலும் உதயநிதி ஸ்டாலின் சதம் அடிக்கிறார் – முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம். கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் “உயிரினும் மேலான” என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற்ற நிலையில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு இன்று சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பொழுது அளவில்லாத வகையில் பெருமை அடைந்து இருக்கிறேன். 3 வெற்றியாளர்களை தேர்வு செய்வதற்கான போட்டி மட்டுமல்ல.. திமுகவின் கருத்தியலை அடுத்த நூற்றாண்டுக்கு தூக்கிச் சுமந்து செல்ல இருக்கும் பேச்சுப் போராளிகளை கண்டறிந்து.. பட்டைத் தீட்டும் பயிற்சி பட்டறை.. அப்படி பட்ட பட்டறையை கட்டி எழுப்பிய இளைஞரணி நடத்திக்கொண்டு இருக்கிறது என்பதுதான் என் பெருமைக்கு காரணம். திமுக என்பதே பேசி பேசி வளர்ந்த கழகம். அந்த காலத்தில் பேசி பேசி ஆட்சியைப் பிடித்தோம் என சொல்வார்கள். ஆனால், அவர்கள் சொல்ல மறந்த அல்லது சொல்லாமல் தவிர்ப்பது என்னவென்றால்.. நாம் பேசும் பேச்சு எல்லாம் வெறும் அலங்கார அடுக்கு மொழி அல்ல.. உலகம் முழுக்க நடந்த புரட்சி, வரலாற்றை பேசினோம். உலக அறிஞர்களின் வரலாற்றை பேசினோம்.
நம் நாட்டில் நடைமுறையில் இருந்த மூடநம்பிக்கைகளை, கொடுமைகளை, பிற்போக்குத்தனம் பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக பேசினோம். இரத்தம் கக்கிய நிலையிலும் அஞ்சாநெஞ்சர் பட்டுக்கோட்டை அழகிரி பேசினார். 95 வயதிலும் மூத்திர வாளியை சுமந்து கொண்டு வலியை தாங்க முடியாமல் பேசியவர் பெரியார் எல்லா தலைப்புகளிலும் மடைதிறந்த வெள்ளம் போல் பேசியவர் அண்ணா. அண்ணா உருவாக்கிய பேச்சாளர்கள் இன்றளவும் இருக்கிறார்கள். சிலப்பதிகாரம், சங்க இலக்கியம் என பழந்தமிழை அழகிய தமிழில் பாமர மக்களுக்கு கொண்டு சென்றவர் கலைஞர். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் ராஜா ராணி படத்தில் கலைஞர் எழுதிய வசனத்தை ஒரு போட்டியாளர் பேசினார். அது சமூக வலைதளங்களில் வைரலானது. இளைஞர் அணி செயலாளர் என்பது பதவி கிடையாது. அது பெரும் பொறுப்பு. அந்த பொறுப்பை உணர்ந்து அவர் செயல்பட்டு வரார். என்னைப் பொறுத்தவரை அந்த பொறுப்பை அவருக்கு கொடுத்தது ஒரு பயிற்சியாக நான் கருதுகிறேன்.நான் வைக்கும் ஒவ்வொரு test லியும் சென்டம் score அடிக்கிறார் 2019ல் அதிமுக ஆட்சிக்கு எதிரான பல்வேறு போராட்டங்கள், நீட் தீர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம், கொரோனா காலத்தில் உதவிகள், நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள், திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டங்கள் உள்ளிட்ட ஏராளமான பணிகளை அவர் செய்து கொண்டு வருகிறார். சேலத்தில் இளைஞர் அணியின் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் இளைஞர் அணி மாநாட்டை நடத்திக் காட்டினார். அந்த மாநாட்டில் நான் பேசியபோது, களப்போர் வீரர்களுக்கு துணை நிற்கும் போர்வீரர்கள் தயாராகி விட்டார்கள் என்று நான் சொன்னேன். அந்த களப்போர் வீரர்களுக்கு துணை நிற்கும் சொற்போர் வீரர்களை அடையாளம் காணும் முன்னெடுப்பு தான் இது. இந்த முன்னெடுப்பு மூலமாக அடையாளம் காணப்பட்ட உங்களால் இந்த கழகம் வளர்ச்சி அடையும். நம் தமிழ்நாடும் மேன்மை அடையும், திமுக வளரும், திமுகவால் தமிழ்நாடு வளரும். இதுதான் நம் லட்சியம். அந்த லட்சிய பாதையில் இளைஞர் அணி வேகமாக நடை போடுகிறது. அதற்கு உதயநிதிக்கும், அவருக்கு துணை நிற்கும் அனைவருக்கும் நன்றியையும்.. பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு கழகத்துக்கு 100 பேச்சாளர்களை தேர்வு செய்யும் பணியை திமுக இளைஞரணிக்கு வழங்கியிருந்தேன். 17,000 போட்டியாளர்கள், 78 நடுவர்கள், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு என பிரம்மாண்டமாக விழாவை நடத்துகிறார்கள். நான் கேட்டது 100 பேச்சாளர்கள் ஆனால் தற்பொழுது 182 பேச்சாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வாகை சூடி உள்ள 3 பேருக்கும் வாழ்த்துகள். இவர்களுக்கு ஒரு லட்சம், 75 ஆயிரம், 50 ஆயிரம் என பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர் அணிக்கு ஒரு வேண்டுகோள்,சொற்களை வென்ற இவர்களுக்கு பரிசு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என உத்தரவிடுகிறேன். 17,000 படிகளை தாண்டி வென்று இருக்கிறார்கள். 17,000 பேரும் பாராட்டுக்குரியவர்கள் தான். வெற்றி, பரிசை தாண்டி போட்டிகளில் பங்கேற்பதுதான் முக்கியம். 182 போட்டியாளர்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம். திமுகவின் தலைவராக சொல்கிறேன் இனி நடக்கும் எல்லா பொதுக் கூட்டங்களிலும், கட்சி நிகழ்ச்சிகளிலும் 182 பேச்சாளர்களையும் பயன்படுத்த வேண்டும். இவர்கள் வெறும் பேச்சாளர்கள் அல்ல.. வருங்கால திராவிட இயக்கத்தின் தலைமுறை. உங்களைப் போன்று நானும் பேசிப்பேசி வளர்ந்தவன் தான். தற்பொழுது உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.
1971ம் ஆண்டில் நடைபெற்ற மாணவர் மாநாட்டில் நான் கல்லூரி மாணவனாக கலந்து கொண்டேன். அந்த மாநாட்டில் துரைமுருகன் போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் இருந்தார்கள். மாநாட்டில் இரண்டு நிமிடம் பேச துரைமுருகனிடம் கேட்டால் ஒப்புக்கொள்ள மாட்டார். அதனால் மாநாட்டிற்கு தலைமை தாங்கிய எல்.ஜி.யிடம் கேட்டேன். 2 நிமிடம் தான் எனக்கு கிடைத்தது. அன்று நான் பேசியது இன்றளவும் என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளது. அந்த மாநாட்டில் “இந்தி மொழி திணிப்புக்கு எதிரான மாணவர் பட்டாலத்தில் என்னையும் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பை நீங்கள் உருவாக்கித் தர வேண்டும்.. மொழிக்காக உயிரையும் தியாகம் செய்ய காத்திருக்கிறோம்.. என் தந்தைக்கு 4 ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அதில், ஒரு பிள்ளை போய் விட்டால் என் தந்தை கவலைப்பட மாட்டார். அந்தப் பாராட்டை வாங்கித் தந்த மகிழ்ச்சி எனக்கு கிடைக்கும். எந்த தியாகத்தையும் செய்ய நான் தயார்” என்று பேசினேன். அது எல்லாம் மறக்க முடியாத நினைவுகள்.
நான் பேசியதை கேட்ட தலைவர் கலைஞர் “இந்த தியாகத்திற்கு ஸ்டாலினை மட்டுமல்ல 4 பிள்ளைகளையும் தர தயாராக இருக்கிறேன்.. நான் உழைத்து உழைத்து எழுதி எழுதி சம்பாதித்த குடும்பத்தை சார்ந்தவன். இந்த குடும்பத்தில் ஒருவர் உள்ள நான்கு பேரும் இந்த நாட்டுக்காக போனாலும் பரவாயில்லை.. ஆனால், ஏழை எளிய வீட்டு பிள்ளைகள் இருக்கிறீர்கள் உங்களை நம்பி.. உங்கள் பெற்றோர்கள் இருக்கிறார்கள்… நீங்கள் முதலில் வீட்டைக் காப்பாற்றுங்கள் பிறகு நாட்டைக் காப்பாற்றுங்கள்” என்று கலைஞர் சொன்னார். மாணவர்களை தூண்டிவிடும் விதமாக அவர் பேசவில்லை மாறாக அவர் அவர்களுக்கு வழி காட்டினார். அதனால்தான் அவர் தாயை விடவும் மேலானவர். அதனால்தான் அவர் தலைவர். பேச்சாளர்கள் மக்களின் மனதை தொடும் வகையில் பேச வேண்டும். சொல்ல நினைக்கும் கருத்துக்களை இனிமையாக, தெளிவாக, புரியும் வகையில் சொல்ல வேண்டும். பாராட்டும் அளவில் உங்கள் பேச்சுக்கள் அமைய வேண்டும் என்றார்.