ஹரிஷ் கல்யாண் படத்தில் ஜெயிலர் படம் நடிகர் ஒருவர் இணைவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடைசியாக லப்பர் பந்து திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்கி இருக்கும் நிலையில் இந்த படம் பல்வேறு தரப்பினரிடைய பாராட்டுகளை பெற்று வருகிறது.
அடுத்ததாக ஹரிஷ் கல்யாண், அந்தகாரம் படத்தின் இயக்குனர் வி. விக்னராஜன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. அதேசமயம் ஹரிஷ் கல்யாண், லிப்ட் படத்தின் இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறார் என்று சமீபத்தில் செய்திகள் கசிந்திருந்தது.
அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட இருப்பதாகவும் விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் மலையாள நடிகர் செம்பன் வினோத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அத்துடன் இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்று புதிய தகவல்கள் தெரிவிக்கிறது. இவர் ஏற்கனவே ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர், விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர், அஜித் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.