சாம்சங் நிர்வாகம், சிஐடியு தொழிற்சங்கம் நிர்வாகிகளுக்கிடையே இடையே அமைச்சர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. போராட்டம் தொடரும் என்று சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த ஶ்ரீபெரும்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனம் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 36வது நாளாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்த அமைச்சர்கள் குழுவை முதலமைச்சர் நியமனம் செய்திருந்தார்.ஏற்கனவே இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில் சாம்சங் விவகாரம் தொடர்பாக சி.ஐ.டி.யு மற்றும் ஊழியர்களிடம் அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
சென்னை தலைமை செயலகத்தில் பொதுப்பணித்துறையின் அமைச்சர் எ.வ. வேலு, தொழில்துறையின் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா,தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், சிறு குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் சிஐடியு மாநில தலைவர் சவுந்தராஜன்,மாநில செயலாளர் முத்துகுமார் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் ஊழியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஊழியர்களிடம் தனியாகவும், நிர்வாகத்திடம் தனியாகவும் 4 மணி நேரம் இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது.
பேச்சு வார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு மாநில தலைவர் சவுந்தராஜன்,
பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது, எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்த போராட்டம் தொடரும் எனபதை தெரிவித்தார்.