முருக பெருமானின் ஜென்ம நட்சத்திரத்தை குறிப்பிடும் வைகாசி விசாக திருவிழா ஆண்டு தோறும் 10 நாட்கள் வசந்த விழாவாக கொண்டாடப்படும்.வைகாசி விசாகத்தை ஒட்டி முருகனின் அறுபடை வீடுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அந்த வகையில் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் காவடி பால்குடம் சுமந்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பல்வேறு ஊர்களில் இருந்து பாத யாத்திரையாக வந்த பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் வைகாசி விசாகத்தை ஒட்டி நள்ளிரவு ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதுகாக்க வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடிய பிறகு காவடி பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.முருகனின் மூன்றாம் படை வீடான பழனியில் வைகாசி விசாகத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. மலையடிவாரத்தில் திரளும் பக்தர்கள் காவடி சுமந்து ஆடிப்பாடி கிரிவலம் வந்த வண்ணம் உள்ளனர். வைகாசி விசாகத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்து வருவதால் பழனி முருகன் கோயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முருகர் கோவில்களிளும் இன்று சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வைகாசி விசாகத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.