பிரேசிலை புரட்டிப்போட்ட கனமழை
பிரேசிலில் இடைவிடாமல் கொட்டிய பலத்த மழையால் அந்நாட்டின் தெற்கு மாகாணமான ரியோ கிராண்டே பெருவெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.
மாகாணத்தின் முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பிரதான சாலைகள் அனைத்தும் நதிகளை போல் மாறிவிட்டதால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் தனித்தீவுகளாக காட்சியளிக்கின்றன.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இதுவரை 40 பேர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் 70 பேரை காணவில்லை என்று புகார்கள் வந்துள்ளதாக கூறியிருக்கின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மாகாணத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் இரு கரைகளையும் தொட்டு பாய்ந்து ஓடுகிறது. மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பிரேசில் பேரிடர் மேலான் படையினர் வெள்ளத்தில் தத்தளித்த இருபதாயிரம் பேரையும் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
வீடுகளில் மூழ்கியதால் வீட்டின் கூரைகளில் தஞ்சம் அடைந்த மக்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு மலை கிராமங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளதால் மீட்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.
பென்டோ நகரில் உள்ள அணை ஒன்று இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் அதன் அருகில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு போர்கால மீட்பு நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.