திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) வாரியத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் பி.ஆர்.நாயுடு, திருமலை வெங்கடேஸ்வரா அவா்கள் கோயில் வளாகத்தில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்றாா் .திருமலை இந்து நம்பிக்கை மற்றும் புனிதத்தின் அடையாளமாக இருப்பதை உறுதி செய்வதில் தனது உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ளாா்.
அவர் இது குறித்து கூறுகையில் “திருமலையில் பணிபுரியும் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும். அதுவே எனது முதல் முயற்சியாகும். இதில் பல சிக்கல்கள் உள்ளன. அதை நாம் கவனிக்க வேண்டும். இந்து அல்லாத ஊழியர்களை வேறு அரசு துறைகளுக்கு மாற்றலாமா? அல்லது விருப்ப ஓய்வு அளிக்கலாமா? என்பதை ஆந்திர அரசுடன் கலந்தாலோசிப்பதாக’’ அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திரப் பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு மற்றும் என்டிஏ அரசாங்கத்தின் நியமனத்திற்கு நன்றி தெரிவித்தார். இது எனது வாழ்க்கையில் ஒரு “திருப்புமுனை” என்று தெரிவித்தார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் முந்தைய நிர்வாகத்தை அவர் விமர்சித்தார். அவர்கள் கோவிலின் நிர்வாகத்தை தவறாகக் கையாண்டதாக குற்றம் சாட்டினார். இது திருமலையின் புனிதத்தன்மையின் வீழ்ச்சி என்று அவர் விவரித்தார்.
வெங்கடேஸ்வர பகவான் மீதான அவரது பக்தியை எடுத்துரைத்த அவர், தவறான நிர்வாகத்தின் காரணமாக கடந்த ஐந்தாண்டுகளாக திருமலைக்குச் செல்வதைத் தவிர்த்ததாகவும், ஆனால் முந்தைய ஆண்டுகளில் தவறாமல் சென்று வந்ததாகவும் கூறினார்.
ஆந்திரப் பிரதேச அரசு திருப்பதி தேவஸ்தான வாரியத்தை மீண்டும் அமைத்துள்ளது. இதில் பி.ஆர்.நாயுடு உட்பட 24 உறுப்பினர்கள் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிறுவனர் சுசித்ரா போன்றவர்கள் உள்ளனர். திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு உள்ளிட்ட தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக சமீபத்திய சர்ச்சையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.