நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களை பிசியாக நடித்து வருகிறார். இவர் கேடி என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் கல்லூரி, அயன், சிறுத்தை என பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.
அந்த வகையில் இவர் சூர்யா, கார்த்தி, தனுஷ், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அதிலும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் இவர் நடனமாடியிருந்த காவாலா பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.
அதை தொடர்ந்து கடைசியாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படமும் இவருக்கு நல்ல வெற்றியை பெற்று தந்தது. மேலும் ஒடேலா 2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் தமன்னா.
இந்நிலையில் தமன்னாவுடன் இணைந்து பிரபல சீரியல் நடிகர் ஒருவர் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சின்னத்திரையில் பணியாற்றி வந்த பலரும் வெள்ளி திரைக்கு சென்று தனக்கான அடையாளத்தை உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன், கவின், வாணி போஜன் போன்றோர் தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களாக மாறிவிட்டனர்.
இன்னும் சிலர் வெள்ளித் திரையில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் ராகுல் ரவி வெள்ளி திரைக்கு செல்கிறார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகை தமன்னாவுடன் பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் இது புதிய படமா? அல்லது ஏதேனும் விளம்பர தொடரா? என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
நடிகர் ராகுல் ரவி, சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து இவர் நந்தினி 2, கண்ணான கண்ணே போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் மருமகள் சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.