டிராகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர் பிரதீப் ரங்கநாதன். அதைத் தொடர்ந்து இவர் லவ் டுடே எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, இந்திய அளவில் பிரபலமானது. அடுத்ததாக தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அஸ்வத் மாரிமுத்து, கடந்த 2020 ஆம் ஆண்டு அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டிராகன் திரைப்படத்தை விஜயின் கோட் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து ஸ்பெஷல் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (அக்டோபர் 12) காலை 11 மணியளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மதியம் மூன்று மணியளவில் இரண்டாவது போஸ்டரும் மாலை 6 மணி அளவில் மூன்றாவது போஸ்டரும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.