மக்களிடம் செல்… அவர்களுடன் வாழ்… என்று நமக்கு பொது வாழ்க்கைக்கானப் பாடம் கற்றுக் தந்தவர் பேரறிஞர் அண்ணா. அந்த அண்ணாவின் அன்புத் தம்பியாக, அவர் உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கத்தை அரை நூற்றாண்டு காலத்திற்கு வழிநடத்திய முத்தமிழறிஞர் கலைஞரும் அதைத்தான் நமக்கு கற்றுத் தந்திருக்கிறார். கழகம் ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் எப்போதும் மக்களிடம் சென்று, மக்களுடன் நிற்கின்ற இயக்கம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில் உள்ள விபரங்கள்; தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பாகவே நமது திராவிட மாடல் அரசின் அமைச்சர்களிடம் அவரவர் துறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டும், அவரவர் மாவட்டங்களில் உள்ள பணிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டும் அறிக்கை தயாரித்து வைக்குமாறு கேட்டுக்கொண்டேன். அதுபோலவே, அமைச்சர்கள் பலரும் அறிக்கைகளை அளித்திருந்தனர். அதனை நானும் துணை முதலமைச்சரும் மூத்த அமைச்சர்களும் பார்வையிட்டு, பத்தாண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் முடங்கிப் போயிருந்த தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பினை மேம்படுத்த மாவட்டவாரியான ஆய்வுகளுக்குத் திட்டமிட்ட நிலையில், பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் தொடக்கத்திலேயே சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமாகப் பெய்த நிலையில், முதலமைச்சரான உங்களில் ஒருவனான நானும், துணை முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களும் நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களும், மேயர் – சேர்மன் – உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் அரசு நிர்வாகத்தினரும் இரவு பகல் பாராமல் களத்தில் நின்று மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பணியாற்றியதை ஊடகங்களும், திராவிட மாடல் அரசின் பணியை நேரில் பார்த்த பொதுமக்களும் பாராட்டுகின்றனர்.
பருவ மழை தொடர்கின்ற நிலையில், மழை நீர் தேங்குகிற இடங்களில் உடனே அவற்றை வடியச் செய்வது, போக்குவரத்துக்கும் அத்தியாவசியத் தேவைக்கும் பாதிப்பின்றி உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்வது உள்ளிட்ட மழைக்கால நிவாரணப் பணிகள் திறம்பட நடைபெற்று வரும் நிலையில், இதனைப் பொறுக்க முடியாமலும், தாங்கள் அரசியல் செய்வதற்கு எதுவும் கிடைக்காததாலும் எதிர்வரிசையிலே இருப்பவர்கள், அதிலும் தங்களுடைய பத்தாண்டுகால மோசமான ஆட்சிக்காலத்தில், கடைசி நான்கு ஆண்டுகளில் படுமோசமான நிர்வாகம் நடத்தியவர்கள், மக்கள் மீதான அக்கறையுடன் செயல்படும் திராவிட மாடல் அரசு மீது அடிப்படையில்லாத அவதூறுகளைப் பரப்ப முனைந்து, அதிலும் முனை முறிந்து போயிருக்கிறார்கள்.
பொதுவாழ்வில் விமர்சனங்கள் சர்வசாதாரணம்தான் என்பதால் எதிர்த்தரப்பின் ஆதாரமற்ற விமர்சனங்களைக் கடந்து, திராவிட மாடல் அரசு தனது மக்கள் நலப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் அக்டோபர் 22-ஆம் தேதியன்று நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக சேலத்திற்குச் சென்றேன். அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றிருப்பவரும் மாவட்டக் கழகச் செயலாளருமான மாண்புமிகு இராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினரும் மேற்கு மாவட்டச் செயலாளருமான திரு. செல்வகணபதி, கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு. சிவலிங்கம் உள்ளிட்ட கழக மூத்த முன்னோடிகள் வரவேற்றனர். அங்கிருந்து நாமக்கல் நோக்கிப் பயணித்தேன்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார். மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் தனக்குரிய தொகுதி மேம்பாட்டு நிதியினை மாநிலம் முழுவதும் பயன்படுத்தும் வாய்ப்பு கொண்டவர். எனினும், அவருக்குத் தமிழ்நாடு என்றால் நாமக்கல்தான். மண்ணின் மைந்தர் என்ற முறையில் எப்போது என்னைச் சந்தித்தாலும் நாமக்கல் மாவட்டத்திற்கான கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றைக் கொடுத்திட மறக்க மாட்டார். நம் கழகத்தின் என் தாய்வீடான இளைஞரணியில் உருவானவர் ராஜேஸ்குமார் என்பதால் செயலில் தனி வேகம் இருக்கும். தனது மாவட்ட வளர்ச்சிக்கான திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் நான் சென்றிருந்ததால் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அவருடன் இணைந்து நாமக்கல் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்த மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் மதுரா செந்தில் அவர்களும் இளைஞரணியில் உருவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில் வளர்ச்சி மிக்க நாமக்கல்லை 1997-இல் அன்றைய கழக ஆட்சியில் தனி மாவட்டமாக உருவாக்கியவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள்தான். மாவட்டம் தந்த அந்த மகத்தானத் தலைவரின் முழு வடிவிலான திருவுருவச் சிலையினை சிலம்பக்கவுண்டர் பூங்காவில் திறந்து வைப்பதற்காக சென்றபோது, வழிநெடுக வெள்ளமென மக்கள்.. மக்கள்.. மக்கள்! மூன்றாண்டுகால திராவிட மாடல் அரசின் ஒவ்வொரு திட்டத்தினாலும் பயன்பெற்ற மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் திரண்டு நின்று வரவேற்பளித்தனர். அவர்களின் முகங்களில் வெளிப்பட்ட மகிழ்ச்சியைக் கண்டேன்.
உங்களில் ஒருவனான என் மீதும், நம் அரசு மீதும் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் கண்டேன். ஒவ்வொருவரிடமும் பேச வேண்டும் என்ற ஆவல் அதிகமானது. நடந்தபடியே அவர்களின் அன்பைப் பெற்றுக் கொண்டேன். கூட்டமாக மக்கள் நின்ற இடங்களில், சரியாகப் பார்க்க முடியவில்லை என்று அவர்கள் தெரிவித்ததால், காரின் கதவைத் திறந்து, கைப்பிடியைப் பிடித்து நின்றபடியே கையசைத்து அவர்களின் அன்பான வாழ்த்துகளைப் பெற்றேன். அவர்களில் பலர் தந்த கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டேன். திராவிட மாடல் அரசின் ஆட்சித் திறனையும் அதற்கு மக்கள் அளிக்கின்ற வரவேற்பையும் காண்பது போல கம்பீரத் திருவுருவச் சிலையாக உயர்ந்து நின்றார் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர். மகிழ்வுடனும் மனநிறைவுடனும் நடைபெற்ற சிலைத் திறப்பு விழாவுக்குப் பிறகு, மதிய உணவை முடித்தபோது, நாமக்கல் மாவட்டத்தில் அண்மையில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புப் பணியினைச் செம்மையாக மேற்கொண்ட காவல்துறையினர் நினைவுக்கு வந்தனர்.
அண்டை மாநிலமான கேரளாவில் ஏ.டி.எம். மையங்களைக் கொள்ளையடித்துவிட்டு, தமிழ்நாட்டுக்குள் வந்த கொள்ளையர்களைப் பிடிப்பதில் திறமையாக செயல்பட்ட நாமக்கல் மாவட்ட காவல்துறையினரை ஏற்கெனவே பாராட்டி கடிதம் எழுதியிருந்தேன். டி.ஜி.பி. தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்திலும் பாராட்டியிருந்தேன். நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் தலைமையிலான தீரமிக்க காவல்துறையினரை நேரில் சந்தித்துப் பாராட்டினேன்.
நாமக்கல் மாவட்டத்தில் 19.50 கோடி ரூபாயில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்து பார்வையிட்டதுடன், பொம்மைக்குட்டைமேட்டில் நடைபெற்ற விழாவில் 16 ஆயிரத்து 31 பயனாளிகளுக்கு 146 கோடியே 56 இலட்ச ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினேன். ஆதிதிராவிடர் நலத்துறைக்குப் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாண்புமிகு அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
ஆதிதிராவிட மக்களின் நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்தி, அவர்கள் அனைவரும் முன்னேறுவதற்கான சமூக நீதித் திட்டங்களை நிறைவேற்றி வருவதுதான் திராவிட மாடல் அரசு. நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, துணை முதலமைச்சர் பொறுப்பினை வகித்த உங்களில் ஒருவனான நான் சட்டமன்றத்தில் ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த அருந்ததியர் இன மக்களுக்கான 3% உள்ஒதுக்கீட்டுத் தீர்மானத்தை முன்மொழியும் வாய்ப்பினைப் பெற்றேன். தலைவர் கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட அந்த இடஒதுக்கீடு, அண்மையில் உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலையும் பெற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 15 ஆண்டுகளில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றம் கண்டிருப்பதைக் காணும்போது அவர்களுக்கான உள் ஒதுக்கீட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றும் வாய்ப்பைப் பெற்ற உங்களில் ஒருவனாகப் பெருமை கொள்கிறேன்.
முதலமைச்சராக முதன்முறையாக நாமக்கல் சென்றபோது, அங்குள்ள அருந்ததியர் மக்களின் வசிப்பிடம் சென்று அவர்களின் நலன்களைக் கேட்டறிந்து, கோரிக்கைகளையும் கேட்டுக்கொண்டேன். அவற்றை நம் திராவிட மாடல் அரசு நிறைவேற்றித் தந்தமைக்கு அவர்கள் என்னிடம் நன்றியினைத் தெரிவித்துக்கொண்டனர். சொன்னதைச் செய்வோம் என்ற முத்தமிழறிஞர் கலைஞர் நெறியிலும், சொல்லாமலும் செய்வோம் என்ற முறையிலும், நாமக்கல்லில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் உரையாற்றும்போது, திராவிட மாடல் ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியினை வழங்கி, திட்டங்கள் செயல்படுத்தும் முறையைக் கண்காணிப்பதற்காக நவம்பர் மாதம் முதல் மாவட்டந்தோறும் நேரில் கள ஆய்வு செய்யவிருக்கிறேன் என்பதையும் தெரிவித்தேன்.
விழாவில் திரண்டிருந்த மக்கள் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் நேரலையில் நிகழ்வைப் பார்த்த பொதுமக்களும் இந்த அறிவிப்புக்குப் பெரும் வரவேற்பை அளித்துள்ளனர். இந்தப் பயணத்தில் மாண்புமிகு அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் எ.வ.வேலு ஆகியோர் நான் துவக்கி வைத்த தங்களது துறை சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக நாமக்கல் மாவட்டத்திற்கு என்னுடனே வந்ததோடு, அத்தனை நிகழ்ச்சிகளையும் முடித்துக்கொண்டு நான் சென்னை திரும்பும் வரையில் உடன் பயணித்தனர். திராவிட மாடல் அரசு தனது திட்டங்களை முழுமையாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கையுடன் உள்ள தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், பண்டிகை நாட்கள் முடிவடைந்த பிறகு, நவம்பர் 5, 6 தேதிகளில் கோவைக்குச் சென்று கள ஆய்வினைத் தொடங்க இருக்கிறேன். மற்ற மாவட்டங்களிலும் தொடரவிருக்கிறேன். கள ஆய்வும் தொடரும், திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களும் தொடரும்!
அரசு சார்ந்த பணிகளை மட்டும்தான் கவனிப்பீர்களா என்று உடன்பிறப்புகளான உங்களின் மனக்குரலை உங்களில் ஒருவனான நான் அறிவேன். கள ஆய்வுப் பணிகளை அந்தந்த மாவட்டங்களில் நிறைவு செய்தபிறகு, கழகப் பணிகளையும் ஆய்வு செய்வேன். கண்மணிகளாம் உடன்பிறப்புகளையும் நேரில் கண்டு நெஞ்சம் மகிழ்வேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.