தமிழகத்திற்கு உலக நாடுகளுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத் துறையின் முதன்மை செயலாளர் சந்திரமோகன் தெரிவித்தார்.
சென்னை தீவுத்திடலில் உலக சுற்றுலா தினத்தை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக தமிழகத்தை கண்டு மகிழ்வோம் 2024 என்ற தலைப்பில் சமூக ஊடகவியலாளர்களை தமிழகத்தின் பாரம்பரியமான இடங்களுக்கு அழைத்து செல்வதற்கான பேருந்து தொடங்க நிகழ்வு நடைபெற்றது.
இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்து வந்துள்ள 13 சமூக ஊடகவியலாளர்களை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக பேருந்து மூலமாகவே மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றனர்.
இந்நிகழ்வில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் முதன்மை செயலாளர் டாக்டர். சந்திரமோகன் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் சமயமூர்த்தி ஆகியோர் பேருந்து சேவையை தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் முதன்மை செயலாளர் சந்திரமோகன், தமிழ்நாடு சுற்றுலா மையங்களை சமூக ஊடக தளங்கள் வாயிலாக விளம்பரம் செய்வதற்கான முயற்சியாக சமூக ஊடகவியலாளர்களுக்கான சுற்றுலாவை இன்று தொடங்கியுள்ளோம். தமிழ்நாட்டில் எல்லா சுற்றுலா தளங்களிலும் உலக தர தொழில்நுட்பங்கள் அமைந்துள்ளது. பாரம்பரியம், பழமை, வாழ்வியல்கள் என எல்லாவற்றிலும் சுற்றுலா மையங்கள் ஈர்ப்புகளை கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் சுற்றுலா மையங்களின் பெருமைகளை உலக அளவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் உலக அளவிலான ஊடகவியலாளர்களை தமிழ்நாடு சுற்றுலா மையங்களுக்கு அனுப்பியுள்ளோம் என்றார்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு : விசாரணை தேதி ஒத்திவைப்பு – நீதிபதி.
மேலும், பிற மாநிலங்கள், பிற நாடுகளில் இருந்து 13 ஊடகவியலாளர்கள் சுற்றுலாவில் கலந்து கொண்டுள்ளார்கள். 10 நாட்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள சுற்றுலா மையங்களையும் இவர்கள் தங்களுடைய ஊடகங்களின் மூலம் உலகுக்கு கொண்டு செல்ல இருக்கிறார்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இணைய வழி தமிழ்நாட்டின் சுற்றுலா விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
கடந்தாண்டு 14 லட்சம் சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாட்டிற்கு சுற்றுலாவுக்கு வந்தனர், இந்த ஆண்டு இதுவரை 8 லட்சம் பேர் சுற்றுலா பயணிகள் தமிழகத்திற்கு வந்து உள்ளார்கள். இந்தாண்டு 20 லட்சம் பேர் சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாட்டிற்கு வருவார்கள். தமிழ்நாடு சுற்றுலா மையங்களை ஊடகவியலாளர்கள் மூலம் விளம்பரப்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு உலக நாடுகளின் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தே வருகிறது. தமிழ்நாடு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்பவர்களை இணையதளத்தில் எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள், எந்த மாதிரியான நோக்கத்தை இணையதளத்தில் அவர்கள் வீடியோவாக பதிவிடுகிறார்கள் என்பதை பொறுத்து அவர்களை சுற்றுலா பயணத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளோம் என தெரிவித்தார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் சமய மூர்த்தி, 10 நாட்கள் தமிழ்நாட்டில் உள்ள சிறப்புமிக்க சுற்றுலா மையங்களுக்கு செல்ல உள்ளார்கள். முதலாவதாக இன்று மாமல்லபுரம் சென்று அங்குள்ள கலை நுட்பங்களை பார்வையிட உள்ளார்கள். மாமல்லபுரத்தின் கலை நுட்பங்களையும் அவற்றின் வரலாற்றையும் ஊடகங்கள் மூலம் உலகம் முழுவதும் கொண்டு செல்ல இருக்கிறார்கள். தொடர்ந்து கோவளம் , தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட இடங்களை நேரடியாக பார்வையிட உள்ளார்கள். மதுரை, ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி, கீழடி, அதோடு வேளாண்மை சார்ந்த சுற்றுலா மையங்களையும் இவர்கள் பார்வையிட்டு உலகுக்கு ஊடகங்கள் வாயிலாக கொண்டு செல்ல உள்ளார்கள், முதல்முறையாக விவசாயிகளையும் வேளாண்மையையும் ஊக்குவிக்கும் விதமாக வேளாண்மை சுற்றுலாவை அறிமுகப்படுத்தியுள்ளோம் என தெரிவித்தார்.