ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கூட்டணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு பின்னர் ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
ஒமர் அப்துல்லா முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இந்த நிலையில் ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கூட்டணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், அமோக வெற்றி பெற்ற ஜம்மு & காஷ்மீர் மக்களுக்கும், தேசிய மாநாட்டு கட்சி- காங்கிரஸ் கூட்டணிக்கும் வாழ்த்துகள்! என தெரிவித்துள்ளார். இந்த வெற்றி இந்தியாவுக்கும், ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த வெற்றி ஜம்மு- காஷ்மீரின் கண்ணியம் மற்றும் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கான மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான ஆணை என்றும் கூறியுள்ளார்.
மேலும், இந்த தருணம் ஒவ்வொரு காஷ்மீரியின் நம்பிக்கையையும் மதிக்கும் நியாயமான மற்றும் அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய எதிர்காலத்தின் தொடக்கத்தைக் குறிப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.