கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பு
சேலத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திமுக வேட்பாளர் செல்வகணபதி திறந்த வேனில் சென்றும், சில இடங்களில் நடந்து சென்றும் பொது மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். பிரச்சாரத்தில் ஈடுபட்ட செல்வகணபதியை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
தற்போது மத்தியில் நடந்து கொண்டிருப்பது மோடி ஆட்சி அல்ல, இது ஒரு மோசடி ஆட்சி என்பதை உணர்ந்து, மக்கள் அவர்களை தூக்கி எறிய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
தேர்தலுக்கு இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் என்பது சூடு பிடித்துள்ளது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் , மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி அவர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று காலை வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதியில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த செல்வகணபதி, பின்னர் அமானி கொண்டலாம்பட்டி, நாட்டாமங்கலம், காட்டூர், பாரப்பட்டி உள்ளிட்ட வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
திறந்த வேனில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட செல்வகணபதி, சில இடங்களில் வீதிகளில் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சேலத்தில் 103 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வரும் நிலையில், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் மக்கள் மத்தியில் பேசும்போது கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். குறிப்பாக பெட்ரோல் , டீசல் விலை உயர்வு , கேஸ் சிலிண்டர் விலை உயர்வு போன்றவற்றாலும், அதிக அளவில் ஜிஎஸ்டி வரி விதிப்பாலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாங்கள் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை பெருமளவில் வரியாக செலுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய பாஜக அரசானது பெரும் முதலாளிகளான அதானி மற்றும் அம்பானிகளுக்கு 14 லட்சம் கோடி வங்கி கடனை தள்ளுபடி செய்கிறது. எனவே மத்திய அரசு ஏழை எளிய மக்களை கண்டு கொள்ளாத, முதலாளிகளுக்கான அரசாக தான் மோடி அரசு உள்ளது.
https://www.mugavari.in/mk-stalin-critizise-pm-modi/
எனவே இது மோடி ஆட்சியல்ல, இது மோசடி ஆட்சியாகும். எனவே இந்த ஆட்சியை மக்கள் தூக்கி எறிய வேண்டும். அதற்காக உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தன்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதேபோல பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக்கு துணையாக இருந்த எடப்பாடி பழனிச்சாமியையும் மக்கள் தூக்கி எறிய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
செல்வகணபதி செல்லும் இடங்களில் எல்லாம் பெண்கள் ஆர்வமோடு வந்து, அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.