ராஜராஜ சோழன் நம்முடைய தமிழ் மன்னனாக இருக்கலாம் ஆனால் அந்த ராஜ ராஜ சோழன் தான் பார்ப்பனர்களை அழைத்து கோவிலுக்குள் இருந்த தமிழை வெளியே தூக்கி போட்டுவிட்டு சமஸ்கிருதத்தை ஓத வைத்தவன். செப்டம்பர் 9 ஆம் தேதி உயிரிழந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் த.வெள்ளையன் உருவப் படத்திறப்பு நிகழ்ச்சி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நடிகர் சத்யராஜ், கவிஞர் அறிவுமதி ஆகியோர் கலந்து கொண்டு மறைந்த வெள்ளையன் உருவப்படத்தை திறந்து வைத்த பின் மேடையில் உரையாற்றினார்கள்.
கவிஞர் அறிவுமதி மேடைப்பேச்சு. இந்தக் கோயம்பேடு என்பது வியர்வையாளர்களின் தோப்பு. முதுகில் மூட்டைகளையும் நெஞ்சில் எழுச்சிகளையும் சுமந்த வியர்வையாளர்களின் கூட்டம். தன் கருப்பு மீசையை அழகாக முறுக்குகிற ஒரே தமிழன் எழுச்சி தமிழன் திருமாவளவன். அதேபோன்று வெள்ளை மீசையை அழகாக முறுக்கிய தமிழன் த.வெள்ளையன் என்று சுருக்கமாக உரையை முடித்தார்.
நடிகர் சத்யராஜ் மேடைப்பேச்சு. வியாபாரிகளுக்கும் தோழனாக இருந்து தொழிலாளர்களுக்கும் தோழனாக இருப்பது மிகப்பெரிய விஷயம். அனைவரையும் அரவணைத்து செல்லும் பாங்கு அண்ணன் வெள்ளையனிடம் இருந்தது. தமிழீழ விடுதலைக்கான பல்வேறு போராட்டங்களை வெள்ளையன் முன்னெடுத்து இருக்கிறார். அதில் நானும் அவரோடு கலந்து கொண்டிருக்கிறேன். ஒருமுறை போராட்டத்தில் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் வருகை தந்தார். அப்போது உடனே எழுந்து அற்புதம் அம்மாளின் காலில் விழுந்து வணங்கினார் வெள்ளையன்.கொக்கோகோலா பெப்சி மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றிற்கு எதிராக அவர் பேசியுள்ளார். சுதேசி பொருட்களை தான் விற்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்ததால் தான் அவருக்கு சுதேசி நாயகன் என்ற பெயர் வந்தது. அவருடைய மறைவிற்கு என்னால் வர முடியவில்லை, படப்பிடிப்பில் இருந்தேன். தற்போது நான் நினைவேந்தலில் கலந்து கொண்டுள்ளேன். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வி.பி.சிங் சிலையை திறக்க என்னை அழைத்தார்கள். இதை நான் என் வாழ்நாள் பெருமையாக நினைக்கிறேன். இரண்டு விஷயங்கள் இருக்கிறது வாழ்வில், ஒன்று மகிழ்ச்சி மற்றொன்று பெருமை. சினிமாவில் நடிக்கிறோம் பிரபலமாகிறோம் அது மகிழ்ச்சி. விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் சென்று வி.பி.சிங் சிலையை திறந்து வைக்கிறோம் அது பெருமை. இன்று வெள்ளையன் படத்தை திறந்து வைக்கிறோம் அது பெருமை.அந்தப் பெருமையை எனக்கு தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் தமிழ் சமூகத்திற்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்….
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மேடைப் பேச்சு. வணிகர் சங்கத்தின் தலைவர் வெள்ளையன் காலமானார் என்ற தகவல் அறிந்து அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளானேன். சுற்றுப்பயணத்தில் இருந்தால் அவரது திரு. உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த முடியாமல் போனது. அவர் வணிகர் சங்க தலைவர் மட்டுமல்ல தமிழ் சமூகத்தின் நலனுக்காக பாடுபட்ட மாபெரும் தலைவர். எனவே அவரது இறுதி நிகழ்வை அரசு நிகழ்வாக நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டேன். வெள்ளையன் எத்தகைய தலைமை பண்பை கொண்டு இருந்தார், போர்குணம் கொண்டிருந்தார், சமூக அக்கறை உள்ளவராக இருந்தார், தமிழ் பற்றாளராக இருந்தார் என்பதனை சந்தான பாரதி ஒவ்வொன்றாக வரிசை படுத்தினார். நான் கவனித்துக் கொண்டிருந்தேன். அவரது உரையை நான் வழிமொழிகிறேன். அவரிடம் மொழி உணர்வும் இன உணர்வும் மேலோங்கி இருந்தது. சமூக நல்லிணக்கத்தை பேண வேண்டும் என்ற பொறுப்புணர்வு மேலோங்கி இருந்தது. பிரச்சனை என்றால் இருதரப்பையும் கலந்து ஆலோசித்து சுமுகமான தீர்வை எட்ட வேண்டும் என நினைப்பவர் த.வெள்ளையன். வடலூரில் ஒரு நிகழ்வில் மக்களுக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் வணிகர்களுக்கும் இடையே ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். கல்பாக்கம் பகுதியில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையில் வெள்ளையன் உடனடியாக என்னை தொடர்பு கொண்டு பேசினார். நான் அந்த பிரச்சனையை தீர்த்து அமைதிபடுத்தினேன்
ஆளுமை மற்றும் தலைமை பண்பு என்பது நாம் வழிந்து உருவாக்கிக் கொள்வது அல்ல, அது இயல்பிலேயே உருவாவது. அவர் அரசியல் கட்சியில் இருந்திருந்தால் மிகப்பெரிய சக்தியாக உருவாகி இருப்பார். சங்கம் உடைந்த பொழுதும் கூட யாரைப் பற்றியும் எந்த குறையும் கூறாதவர். இது எல்லோருக்கும் வாய்க்காது. தமிழீழ விடுதலைக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி ஈடுபாட்டுடன் இருந்தவர். மேலும் அயல்நாட்டு நேரடி முதலீடுகளை எதிர்ப்பதில் அவர் முன்னணியில் இருந்தார். ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்ப்பதில் எங்களை எல்லாம் ஒருங்கிணைத்தார். தன் தலைமையை பின்பற்றும் அனைவரையும் அரசியல் படுத்த வேண்டும் என்கிற புரிதல் மற்றும் தெளிவை கொண்டிருந்தார். இன்றைய சின்ன சின்ன விற்பனையில் கூட ரிலையன்ஸ் அம்பானி போன்றவர்கள் நுழைந்து கொண்டு ஆக்கிரமித்துள்ளார்கள். அதை அன்றே எதிர்த்தவர் வெள்ளையன். அந்நிய நேரடி முதலீடு உலகமயமாதல், தாராளமயமாதல் ஆகியவற்றால் இன்று பெட்டிக்கடைகள் கூட அறுகி வருகிறது.
ஆட்சி அதிகாரத்திற்கு யார் வரவேண்டும் என்பதையும் அதானியும் அம்பானியும் தான் தீர்மானிக்கிறார்கள். மோடியும் அமித்ஷாவும் அம்பானிக்கும் அதானிக்கும் பினாமிகளாக இருக்கிறார்கள். உண்மையில் பிரதமர் மோடி என்று சொல்வதை விட அதானி என்று சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும். உண்மையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா என்று சொல்வதை விட அம்பானி என்று சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும். வழிப்பறி, கமிஷன், கந்துவட்டியென சிறு வியாபாரிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் தடுத்து பாதுகாப்பு அரணாக இருந்தவர் வெள்ளையன். தம்பி முத்துக்குமரன் உயிருக்கு ஊசலாடி கொண்டிருந்த பொழுது தன் இறப்பைப் பற்றி அண்ணன் பிரபாகரனிடமும் அண்ணன் திருமாவளவனிடமும் கூறுங்கள் என்று சொல்லி இருக்கிறான். அண்ணன் பிரபாகரனுக்கு எப்படியும் தகவல் சென்றுவிடும் திருமாவளவனுக்கு தகவலை நீங்கள் சொல்லி விடுங்கள் என்று வெள்ளையனிடம் கூறியிருக்கிறான்.
இந்த சமூக உளவியலை அவன் எப்படி உணர்ந்து இருக்கிறான் என்று பாருங்கள். ஊடகங்களிலும் இதைப் பற்றிய செய்தி இல்லை இருட்டடிப்பு செய்து விட்டார்கள். எப்படி இந்த சமூகம் திருமாவளவனை புறக்கணிக்கிறது என்பதனை அவன் உணர்ந்து இருக்கிறான். நான் உண்ணாநிலைப் போராட்டம் இருந்த பொழுது என்னோடு நான்கு நாட்கள் இருந்திருக்கிறான். நான் போராட்டத்தை இன்னும் சில நாட்கள் முன்னெடுத்திருந்தால் விடுதலையும் எழுச்சியும் கிடைத்து இருக்கும் என்று நினைத்திருந்தான். பின்பு அவன் 10 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு தனக்கு தானே தீ வைத்துக் கொண்டு இறந்துவிட்டான். அவன் செய்தது எப்படிப்பட்ட தியாகம். திராவிடம் வேறு தமிழ் தேசியம் வேறு என்று விவாதம் நடத்துவதே அரசியல் அறியாமை என்று நான் நினைக்கிறேன். திமுக மீது இருக்கும் வெறுப்பை திராவிட அரசியல் வெறுப்பாக மாற்றுகிறார்கள்.
பெரியாரைப் பற்றி தேவையில்லாமல் அண்ட புளுகு புளுகி கொண்டிருக்கிறார்கள். பெரியாரை எதிர்த்து அவர் மீது அவதூறு பரப்புவது ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும் செய்யும் துரோகம் பெரியார் காலத்தில் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் தான் உருவானது. இன்று தலித்துக்கள் அல்லாதார் அரசியல் இயக்கங்களை உருவாக்க நினைக்கிறார்கள். இதற்கெல்லாம் பிஜேபி தான் காரணம்.
பிரதமர் மோடி பிரிவினையை தூண்ட முயற்சிப்பதாக சஞ்சய் ராவத் – குற்றச்சாட்டு
ராஜராஜ சோழன் நம்முடைய தமிழ் மன்னனாக இருக்கலாம், ஆனால் அந்த ராஜ ராஜ சோழன் தான் பார்ப்பனர்களை அழைத்து கோவிலுக்குள் இருந்த தமிழை வெளியே தூக்கி போட்டுவிட்டு சமஸ்கிருதத்தை ஓத வைத்தான். நம்முடைய நிலபுலங்களை பறித்து அவர்களுக்கு கிராமம் கிராமமாக தானம் கொடுத்தான். பிராமணர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தியவன். ஆரியம் இங்கு வேரூன்றுவதற்கு நம்முடைய மூத்தோர்களும் மாமன்னர்களும் தான் காரணம். பிஜேபியின் உண்மை முகத்தை பார்க்க வேண்டும் என்றால் கூட பெரியார் கண்ணாடியை அணிந்து கொண்டு தான் பார்க்க வேண்டும். அம்பேத்கர் கண்ணாடியை அணிந்து கொண்டு பார்க்க வேண்டும். மேடை கிடைக்கிறது சமூக ஊடகம் கிடைக்கிறது என்பதற்காக சிலர் நஞ்சை பேசி வருகிறார்கள். திராவிடம் இருப்பதால்தான் தமிழ் பாதுகாப்பாக இருக்கிறது. தமிழ் தேசிய அரசியல் பாதுகாப்பாக இருக்கிறது. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.