கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15ம் தேதி வரை நீதிமன்ற காவல்
நீங்க நடத்தின விசாரணை போதும் – கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய நீதிபதி.
அமலாக்கத் துறையால் கடந்த 21-ம் தேதி கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கியது டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம்.
கடந்த 21 ஆம் தேதி டெல்லியில் உள்ள இல்லத்தில் வைத்து இரவோடு இரவாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். மார்ச் 22 ஆம் தேதி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவரை 7 நாட்கள் (மார்ச் 28) விசாரணை காவல் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
அமலாக்க துறைக்கு வழங்கப்பட்ட விசாரணை காவல் கடந்த 28ம் தேதி நிறைவடைந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்போது அமலாக்கத்துறை தரப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக் கூறி மேலும் 7 நாட்கள் (ஒரு வாரம்) அமலாக்கத்துறை விசாரணை காவலில் நீட்டிக்க கோரிக்கையை வைத்தது.
7 – நாட்கள் தர முடியாது என்று கூறிய நீதிபதி அரவிந்த் கெஜ்ரிவாலின் போலீஸ் காவலை ஏப்ரல் 1ம் தேதி (இன்று) வரை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து உத்தாவிட்டார். இரண்டாவது முறை நீடித்து வழங்கப்பட்ட நான்கு நாட்கள் விசாரணை காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறியதோடு, கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலில் வைக்க கோரிக்கை வைத்தனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் அமலாக்கத்துறை கோரிக்கைக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்காததற்கும் என்ன சம்பந்தம்? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அமலாக்கத்துறை தரப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் அவரது செல்போன் பாஸ்வேர்ட் உள்ளிட்டவை பற்றிய விவரங்களை தெரிவிக்கவில்லை எனவும், வரும் நாட்களில் மீண்டும் அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம் வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
https://www.mugavari.in/we-will-fulfill-our-demands-once-there-is-a-change/
இதனையடுத்து நீதிபதி, அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். நீதிமன்ற காவலில் இருக்கும் நாட்களில் அரவிந்த் கெஜ்ரிவால், பகவத் கீதை , ராமாயணம் மற்றும் பத்திரிகையாளர் நீர்ஜா சவுத்ரி எழுதிய பிரதமர்கள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள் என்ற மூன்று புத்தகங்களை எடுத்து செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கையை அவரின் வழக்கறிஞர்கள் நீதிபதி முன் வைத்தார்கள்.