அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் – நீதிபதிகள்
முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனது கைது சட்டவிரோதமானது என்று அறிவிக்க கோரி அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் கெஜ்ரிவால்.
வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தான் கைது செய்யப்பட்டு இருப்பது சட்ட விரோதம் எனவும், முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்றும் தான் ஒரு ரூபாய் கூட பெறவில்லை என்றும் கூறியிருந்தார்.
இவ்வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை அதிக காலம் பிடிக்கும் என்பதால் மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு இடைக்கால நிவாரணமாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கலாம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
வழக்கினை மே 7ம் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைப்பதாகவும் அன்றைய தினம் இரு தரப்பும் வாதங்களை முன் வைப்பதற்கு தயாராக இருக்குமாறு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து, வழக்கில் வாதங்கள் விரைவில் முடிவடையவில்லை என்றால் இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என தெளிவுபடுத்திய நீதிபதிகள், இடைக்கால ஜாமின் வழங்கப்படுமா? வழங்கப்படாதா? என்பது குறித்து நீதிமன்றம் எந்த கருத்தும் கூறவில்லை.
ஆனால் வழக்கின் வாதங்கள் நிறைவடைவதில் கூடுதல் காலம் எடுத்துக் கொண்டால் இடைக்கால நிவாரணம் வழங்குவது பற்றி ஆலோசிக்கலாம் என்பதையே நீதிமன்றம் கூறியுள்ளதாக தெளிவுபடுத்தியுள்ள நீதிபதிகள் வழக்கை செவ்வாய் கிழமைக்கு ஒத்திவைத்தனர். மே 7ம் தேதி விசாரணையின் போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால நிவாரணமாக ஜாமீன் கிடைக்குமா என்பது தெரியவரும்.