சின்னம் வழங்கப்படாத கட்சிகளுக்கு இன்று மாலை 4 மணிக்கு சின்னம் ஒதுக்கும் பணிகள் தொடங்கும்…
சென்னையில் இதுவரை ரூ. 9.08 கோடி அளவிற்கான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை முதல் தளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த உலக சாதனை நிகழ்வாக வடசென்னை பகுதியில் நடைபெற்றதையொட்டி, Elite India records மற்றும் India Academy Records சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆணையருமான ஜெ.ராதாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.
வாக்கு அளிக்கும் உரிமையை வலியுறுத்தி வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 1456 வாக்குச்சாவடியில் 4,10,988 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி உலக சாதனை செய்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், “வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி இன்று முதல் மூன்று இடங்களில் நடைபெறுகிறது.
சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா போன்ற பெரிய மாநகரங்களில் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
அந்த வகையில் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை ஆகிய தொகுதிகளில் ஒட்டு மொத்தமாக 40% பேர் வாக்களிப்பது இல்லை. எனவே அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் இதுவரை ரூ. 9.08 கோடி அளவிற்கான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ. 3.30 மூன்று ரொக்கமாகவும், ரூ. 5.5 கோடி தங்கமாகவும், ரூ. 15 இலட்சம் மதிப்புள்ள ஐபோன், ரூ. 7.5 லட்சம் மதிப்புள்ள 25 மடிக்கணிணி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பொது சொத்துக்களில் மேற்கொள்ளப்பட்ட சுமார் ரூ. 29 ஆயிரத்து 678 பலவகையான சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், பேனர்கள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் சொத்தில் ரூ. 15 ஆயிரத்து 159 பலவகை விளம்பரங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபடாதவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. இதில் குடும்பத்தில் திருமணம், உடல்நிலை, பணியிட மாற்றம் ஆகியவை மேற்கொண்டவர்களுக்கான காரணங்களையும், பிற நியாயமான கோரிக்கைகளையும் குழு அமைக்கப்பட்டு அதன் மூலமாக ஆய்வு செய்து நியாயமாக இருந்தால் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும். சிபாரிசுகள், பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படாது.
சி.வி.ஜில் செயலி வாயிலாக குறைந்த அளவு புகார்கள் வந்துள்ளன. இதுவரை 147 புகார்கள் வந்துள்ளது. தொலைக்காட்சிகளில் கொடுக்கப்பட்டுள்ள விளம்பரங்கள், சிவிஜில் புகார்களை கண்காணிக்க 24 மணி நேர புகார் மையம் செயல்பட்டு வருகிறது.
பிரச்சனை இருக்கக்கூடிய வாக்குச்சாவடிகளுக்காக கூடுதல் துணை இராணுவம் தேவைப்படி தேர்தல் பார்வையாளர்களுடைய ஆலோசனைக்கு ஏற்ப கேட்கப்படும்.
வேட்பாளர் இறுதிபட்டியல் இன்று மாலை வெளியிடப்பட உள்ள நிலையில், சின்னம் வழங்கப்படாத கட்சிகளுக்கு இன்று மாலை 4 மணிக்கு சின்னம் ஒதுக்கும் பணிகள் தொடங்கும்”, என்றார்.