ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 12 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், நேற்று இரவு 13வது லீக் போட்டிகள் நடைபெற்றது. விசாகப்பட்டினத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்களைக் குவித்தது. டெல்லி அணி தரப்பில் வார்னர், கேப்டன் ரிஷப் பண்ட் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
இதைத் தொடர்ந்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்கம் முதலே தடுமாறியது. கடைசி நான்கு ஓவர்கள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெறுவதற்கு 70 ரன்களுக்கு மேல் தேவைப்பட்ட நிலையில், தோனி களமிறங்கி தனது பாணியில் அதிரடி காட்டினார். 16 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இறுதி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரில் 20 ரன்களை தோனி எடுத்தார். முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.