மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 42 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இந்த நிலையில், இன்று 43வது லீக் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இந்த நிலையில், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மெக்ரூர் 27 பந்துகளில் 84 ரன்கள் குவித்து அதிரடி காட்டி அவுட்டானார். அடுத்த வந்த அபிஷேக் போரெல் 36 ரன்களும் ஷாய் ஹோப் 41 ரன்களும், கேப்டன் ரிஷப் பந்த் 29 ரன்களும், திரிஷ்டன் ஸ்டப்ஸ் 48 ரன்களும், அக்ஷர் பட்டேல் 11 ரன்களும் எடுத்தனர். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் மும்பை அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இஷான் கிஷான் 20 ரன்னிலும் ரோகித் சர்மா 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 26 ரன்னிலும் திலக் வர்மா 63 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடி காட்டிய டிம் டேவிட் 17 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 247 ரன்கள் எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வீழ்ந்தது. டெல்லி அணியில் ஆட்டநாயகன் விருது ஜாஜ் பிராஸர் மெகர்க்கு வழங்கப்பட்டது.