குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 51 லீக் போட்டிகள் நடந்துள்ளன. நேற்று 52வது லீக் போட்டி நடைபெற்றது. பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 52வது லீக் போட்டியில் பாப் டூ பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூ பிளசிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து குஜராத் அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விருத்திமான் சஹா 1 ரன்களிலும் சுப்மான் கில் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் 6 ரன்களிலும் சாருக்கான் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பின்னர் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் பெங்களூரு அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய விராட் கோலி 42 ரன்களிலும் பாப் டூ பிளசிஸ் 64 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய வில் ஜாக்ஸ் 1 ரன்களிலும் ரஜத் படிதார் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 13.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 152 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெங்களூரு அணியின் ஆட்டநாயகனாக ,முகமது சிராஜ் தேர்வு செய்யப்பட்டார்.