ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 37 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இந்த நிலையில், இன்று 38வது லீக் போட்டி நடைபெறுகிறது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 38வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 6 வெற்றி 1 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் முதலாவது இடத்திலுள்ளது. மும்பை அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 3 வெற்றி 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திலுள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 29 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை அணி 15 முறையும் ராஜஸ்தான் அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போனது. நடப்புத் தொடரில் கடந்த 14வது லீக் போட்டியில் இரு அணிகளிலும் மோதிய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்திருந்தது. தற்போது மும்பை அணி அதற்கு பதிலடி கொடுக்குமா என ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ராஜஸ்தான் அணி பந்துவீசவுள்ளது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷானும் ரோகித் சர்மாவும் களமிறங்கவுள்ளனர்.