ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி முதலாவது பேட்டிங்கில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 179 ரன்கள் எடுத்தது.
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 37 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இந்த நிலையில், இன்று 38வது லீக் போட்டி நடைபெற்றது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 38வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ராஜஸ்தான் அணி பந்துவீசியது,. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இஷான் கிஷான் ரன் ஏதுமின்றியும் ரோகித் சர்மா 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 10 ரன்னிலும் திலக் வர்மா 65 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடியாக விளையாடிய நெஹால் வதேரா 24 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 179 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சு தரப்பில் சந்தீப் சர்மா 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். பின்னர் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி இரண்டாவது பேட்டிங் விளையாடுகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஸ் பட்லரும் யாஷ்வி ஜெய்ஸ்வாலும் களமிறங்கினர். தற்போது வரை அணியானது 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 35 ரன்கள் எடுத்துள்ளது. பட்லர் 14 ரன்னிலும் ஜெய்ஸ்வால் 19 ரன்னிலும் களத்திலுள்ளனர்.