ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 40 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இந்த நிலையில், நேற்று 41வது லீக் போட்டி நடைபெற்றது. ஐதரபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 41வது லீக் போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பாப் டூ பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூ பிளசிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ஐதராபாத் அணி பந்துவீசியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பாப் டூ பிளசிஸ் 25 ரன்னிலும் விராட் கோலி 51 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய வில் ஜாக்ஸ் 6 ரன்னிலும் அதிரடி காட்டிய ரஜத் படிதார் 20 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 206 ரன்கள் குவித்தது.
பின்னர் 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 1 ரன்னிலும் அபிஷேக் ஷர்மா 31 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய 7 ரன்னிலும் நிதிஷ்குமார் ரெட்டி 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அணியின் அதிகபட்சமாக சபாஷ் அகமது 40 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 171 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது ரஜத் படிதாருக்கு வழங்கப்பட்டது.