கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி லியோ எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த இந்த படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். மனோஜ் பரமஹம்சா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷாவும் வில்லன்களாக சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரும் நடித்திருந்தனர்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் வசூல் ரீதியாக அடித்து நொறுக்கியது. அந்த வகையில் கிட்டத்தட்ட 627 கோடிக்கு மேல் வசூல் செய்து கடந்தாண்டில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படம் இன்றுடன் (அக்டோபர் 19, 2024) ஓரண்டை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக லியோ படத்தின் மேக்கிங் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 7 நிமிடங்கள் 54 வினாடிகள் இருக்கும் இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இன்று லியோ 2 படம் குறித்த அறிவிப்பு வெளியாகமா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் விஜய் அரசியலில் களம் இறங்கி இருப்பதால் தளபதி 69 திரைப்படம் தான் தனது கடைசி படம் என மிகத் தெளிவாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். இருப்பினும் லியோ 2 படம் வரவேண்டும் என்று ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் நடிகர் விஜய், தளபதி 69 படத்தை முடித்த பிறகு லோகேஷ் கனகராஜிடம் 20 நாட்கள் கால் சீட் தந்திருப்பதாகவும் இது லியோ 2 படத்தில் நடிப்பதற்காக இருக்கலாம் என்றும் சமூக வலைதளங்களில் பல தகவல்கள் உலா வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.